சுங்கை ஜாத்தி, கெபுன் நெனாஸ் சாலைப் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு

கிள்ளான்:
செந்தோசா சட்டமன்றத்தை உள்ளடக்கியுள்ள ஜாலான் சுங்கை ஜாத்தி, ஜாலான் கெபுன் நெனாஸ் ஆகிய பகுதிகளில் காணப்படும் சாலைப் பிரச்சினை உட்பட அடிப்படை வசதிகளில் மேம்பாட்டுக்குறைவு, குடியிருப்புகளில் சட்ட விரோதப் பதாகைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கிள்ளான் மாநகர் பொதுப்பணி இலாகா அதிகாரிகளுடன் சந்திப்புக் கூட்டமொன்றை நடத்தினார்.

அண்மையில் சட்டமன்ற சேவை மையக் கூட்ட அறையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், ஜேகேஆர் அதிகாரிகளுடன் கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு மேற்பட்ட பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்ததுடன், தொடர்ந்து அப்பிரச்சினகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டனர்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொதுப்பணி இலாகா அதிகாரிகள் அங்குள்ள சீரமைப்பற்ற நடப்பு நிலவரங்களைக் கண்காணித்ததுடன் அதற்குத் தீர்வு காண்பதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பெடுத்துக் கொண்டனர். இதன் தொடர்பில் ஒட்டுமொத்த சுங்கை ஜாத்தி, கெபுன் நெனாஸ் பகுதிகளச் சீரமைக்கும் நடவடிக்கைகள் ஏககாலத்தில் மேற்கொள்ளப்படும் என்று அவ்வதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக மாநில மந்திரி பெசாரின் சிறப்பதிகாரியுமான குணராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, தாமான் செந்தோசா ஒரு நகர அந்தஸ்துடையப் பகுதியாக உருமாற்றம் பெறுவதற்கான முயற்சியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியப் பணிகள் குறித்தும் கருத்துப் பரிமாறப்பட்டது. மேலும், இதன் தொடர்பில் எங்களின் முயற்சிகள் வெற்றி பெறும் வகையில் இங்குள்ள பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

குறிப்பாக, வாகனத்திலிருந்து குப்பைகளை வெளியே வீசி எறிதல் போன்ற நடவடிக்கைகளை தயவு செய்து கைவிடுங்கள். மேலும், கடை நடத்துனர்கள் தங்கள் குப்பைகளைச் சாலையோரத்தில் கொண்டு வந்து சேர்க்காமல் அவரவர் கடைகளில் குப்பைத் தொட்டிகள் இருப்பதை முறையாக நிர்வகித்துக் கொள்ளுங்கள்.

நம் வீட்டைப்போல் நாம் வசிக்கும் இடத்தையும் தூய்மைப் பராமரிப்புடன் வைத்திருப்பது நம் அனைவரின் கடமையாகும். சுத்தம், சுகாதாரத்தைப் பாதுகாத்தால் சுற்றுப்புறமும் அழகாகக் காட்ட்சியளிக்கும். நம் குடும்பமும் ஆரோக்கியமாகவும் அறிவுக் கூர்மையுடனும் திகழ முடியும், என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here