மறுசுழற்சி தொழிற்சாலையில்  சோதனை : 5 டன்  மின்கம்பிகள் பறிமுதல் – அந்நிய பிரஜைகள் கைது

பந்திங், மார்ச்.20-

மறுசுழற்சி தொழிற்சாலையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 49 அந்நியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதோடு 5 டன் மின் கம்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையினர்,  பந்திங் தெலுக் பங்ளிமா காராங்கில் உள்ள மின்னியல் கழிவு பொருட்கள் மறுசுழற்சி தொழிற்சாலையில் மேற்கொண்ட அந்த அதிரடி சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அப்பிரிவின் துணை தலைமை இயக்குநர் டத்தோ சி. சண்முக மூர்த்தி தெரிவித்தார்.

சிலாங்கூர் குடிநுழைவுத்துறை, சிலாங்கூர் சுற்று  சூழல் இலாகா, கோல லங்காட் நகராண்மைக் கழகம், கோலா லங்காட் நில அலுவலகம், டிஎன்பி நிறுவனம்,டெலிகோம். மலேசியா ஆகிய 7 இலாக்காக்களுடன் இணைந்து இந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி, இப்பகுதியின் முதன்மை சாலையிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செம்பனை தோட்டத்தின் மத்தியில் இயங்கி வந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 இந்த தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட, பழுதடைந்த மின்னியல் பொருட்களை வாங்கி அதன் பாகங்களிலிருந்து யுரேனியம், பிலம்பம், தங்கத்தை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

  அதுமட்டுமன்றி இந்த தொழிற்சாலையில் டெலிகோம் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 5 டன் எடை கொண்ட மின்கம்பிகளும் கைபற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 156,000 ரிங்கிட் . இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.  அங்கிருந்த 49 அந்நிய பிரஜைகளிடம் குடிநுழைவு  துறையினர் சோதனை மேற்கொண்டு அவர்களைக் கைது செய்தனர்.

மேலும் உரிமம் இல்லாமல் பழைய மின் கம்பிகளை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் கோல லங்காட் நகராண்மைக் கழகம் 2 அபராத நோட்டிஸூகளையும் வழங்கியது.

  ஒவ்வொரு குற்றத்திற்கும் 1000 ரிங்கிட்டும் குறையாத தொகையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் இந்த அபராதத் தொகையை செலுத்தா விட்டால் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

  இதனிடையே திருடப்பட்டதாக நம்பப்படும் 5 டன் மின்கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டு கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

  அதே போல் கைது செய்யப்பட்ட அந்நிய பிரஜைகளும் ஷா ஆலாமில் உள்ள குடிநுழைவுத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் சண்முக மூர்த்தி தமது அறிக்கையில் விவரித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here