கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்ததோடு போக்குவரத்து ஸ்தம்பித்தது. நான்கு வெளிநாட்டவர்கள் உட்பட 16 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, லெந்தாங் ஆர்&ஆர் (ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு) பகுதிக்கு அருகே கவிழ்ந்து. இந்த விபத்தினால் கிழக்கு கடற்கரையை நோக்கிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்துப் பாதைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் பட்ருல் ஹிஷாம் சாரி கூறுகையில், தங்களுக்கு காலை 7.53 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு காலை 8.12 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றடைந்தனர். சிக்கியிருந்த ஒரு பெண்ணை மீட்டு பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மற்றொரு பெண் மற்றும் மூன்று ஆடவர்களும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் (LLM) பேருந்தை நகர்த்துவதற்கான முயற்சியால் விபத்து நடந்த நெடுஞ்சாலையில் 4.7 கிமீ வரை போக்குவரத்து ஸ்தம்பித்ததாக அறியப்படுகிறது.









