சிறையில் நஜிப்பிற்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை: சிறைத்துறை தலைமை இயக்குநர்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறைத்துறைத் தலைமை இயக்குநர் நோர்டின் முஹம்மது தெரிவித்துள்ளார். எந்த ஒரு கைதிக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் அனைவரும் ஒரே மாதிரியான செயல்பாட்டு நடைமுறைகளின்படி நிர்வகிக்கப்படுவதாகவும் நோர்டின் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.

காஜாங் சிறையில்  தண்டனை அனுபவித்து வரும் நஜிப்பும் இதில் அடங்குவார். அவர் அதே விதிமுறைகள் மற்றும் சிறைச்சாலை சட்டம் 1955 க்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். கைதிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். காஜாங் சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட  சமய போதகர் வான் ஜி வான் ஹுசின், முன்னாள் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறையில்  மிகச் சிறப்பான சலுகைகள் அளிக்கப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து இது அமைந்துள்ளது. நஜிப் கைதி உடையை அணியவில்லை. ஆனால் வீட்டில் ஒருவர் அணிவது போன்ற வழக்கமான ஆடைகளை அணிந்திருந்தார் என்று வான் ஜி கூறினார்.

2012 ஆம் ஆண்டு முகநூல் பதிவின் மூலம் சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவுக்கு எதிராக தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டதற்காக வான் ஜிக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. SRC இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட் வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் தனது இறுதி மேல்முறையீட்டை நிராகரித்ததைத் தொடர்ந்து நஜிப் தனது ஆரம்ப 12 ஆண்டு சிறைத் தண்டனையை ஆகஸ்ட் 23, 2022 அன்று தொடங்கினார். பிப்ரவரியில் நஜிப்பின் சிறைத்தண்டனை 12லிருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதாக பெடரல் டெரிட்டரிஸ் மன்னிப்பு வாரியம் அறிவித்தது. அவரது அபராதமும் 210 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here