மோடியின் வாக்குறுதிக்கு கேரண்டி கிடையாது – ஸ்டாலின்

தென்காசி: ப்ரீத்திக்கு நான் கேரண்டி விளம்பரத்தை போல் மோடியின் கேரண்டி விளம்பரம் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்ரீகுமார் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் செய்திருந்தார். அவர் அப்போது சீன பட்டாசுகளை பாஜக அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் சிவகாசியில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு பட்டாசு தயாரிப்பு சரிவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வந்துவிட்டால் கூடவே மக்கள் மேல் மோடிக்கு கரிசனமும் வந்துவிடுகிறது.

சிலிண்டர்: திடீரென விலையை குறைப்பார். இப்போது கூட சிலிண்டர் விலையையும் பெட்ரோல் டீசல் விலையையும் குறைத்திருக்கிறார். விலையை ஏற்றியது யார், மோடி பிரதமரான நாள் முதல் விலை ஏறிக் கொண்டே இருந்தது. ஆனால் விலையேற்றத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருப்பார். தேர்தல் நேரம் வந்துவிட்டால் மட்டும் விலையைக் குறைக்கும் பவர் வந்துவிடும். மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் என்று உடனடியாக சிலிண்டர் விலையை குறைத்தார். வருடா வருடம்தான் மகளிர் தினம் வருது, அப்போதெல்லாம் குறைத்தாரா இல்லையே! அப்போதெல்லாம் இந்திய நாட்டு மகளிரும் இந்திய குடும்பங்களும் படும் கஷ்டம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா.

தேர்தல் வந்ததும்: இப்போது தேர்தல் வந்ததும் குறைக்கிறார்! என்னவொரு கருணை உள்ளம் அவருக்கு தேர்தலுக்கு தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம். மோடி பிரதமராக பொறுப்பேற்பதற்கு 2013 ஆம் ஆண்டுக்கு முன்னால் சிலிண்டர் விலை எவ்வளவு இருந்தது, வெறும் ரூ 410 .10 ஆண்டுகள் கழித்து 1103 ரூபாய்க்கு சிலிண்டர் விற்கப்படுகிறது. 5 மாநில தேர்தல் வந்தது. கூடவே மோடிக்கு இரக்கமும் வந்தது. சிலிண்டர் விலை குறைந்தது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இதனால் 100 ரூபாய் குறைத்திருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் மட்டும் விலை குறைப்பு செய்வது பச்சோந்தி அரசியல் இல்லையா! ரூ 410 க்கு இருந்த சிலிண்டரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தியதுதான் உங்களின் சாதனை. தேர்தல் வந்ததால் சிலிண்டர் விலையை மட்டுமல்ல, பெட்ரோல் டீசல் விலையையும் குறைக்கிறார். விலைக் குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி நடத்தும் நாடகம். அவரது நாடகங்களை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி: இப்படிப்பட்ட பிரதமர் மோடியை நீங்கள் நம்புகிறீர்களா, மக்கள் யாருமே அவரை நம்பவில்லை. உடனே மக்களவை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார், என்ன தெரியுமா? தாய்மார்கள் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறார்கள். ஒரு மிக்ஸி விளம்பரம் வருமே நினைவு இருக்கிறதா? மோடியின் கேரண்டி: “ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்ற ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர் “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில் அவரின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை. பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், 10 ஆண்டுகளாக சொன்ன எதையுமே செய்யாமல் சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்ய உங்களுக்க வெட்கமாக இல்லையா?

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடலாம் என சொன்னாரே? 15 லட்சம் இல்லை, 15 ஆயிரமாவது மக்களுக்கு கொடுத்தாரா, 15 ரூபாயாவது கொடுத்தாரா? அது மாதிரியான கேரண்டியா? இல்லை ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என சொன்னாரே என்ன ஆனது. உலகத் தொழிலாளர் அமைப்பு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் 83% இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிக்கை கூறுகிறது.

இதுதான் மோடி சொல்லும் கேரண்டியின் லட்சணம்! புதிது புதிதாக வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்றாத பழைய வாக்குறுதியெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி தப்புக் கணக்கு போடுகிறார். ஆளுநரை பேசுவாரா: மோடி இப்படி வெறும் கையால் முழம் போடுகிறார் என்றால் மற்றொருவர் இருக்கிறார் பழனிசாமி. அவர் காற்றிலேயே கம்பு சுற்றுகிறார், எங்கயாவது பாஜகவையோ மோடியையோ விமர்சித்து அவர் ஒரு முறையாவது பேசுகிறாரா, பிரதமரை பற்றி மட்டுமில்லை ஆளுநரை பற்றி கூட பேசுனதில்லை. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here