பாகிஸ்தான்:
சீன நாட்டவர்கள் பணி செய்யும் இடங்களை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல்கள் நடைபெறுவதால் பாகிஸ்தானில் பல்வேறு திட்டப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சீன நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா பகுதியில் ஹைட்ரோ பவர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கே திடீரென நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், பலர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். இதனால் இந்த திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த சீன நிறுவனம் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை வெடி பொருட்கள் நிரம்பிய வாகனம் ஒன்று விஷா மாவட்டத்தில் தாசு ஹைட்ரோ ப்ராஜெக்ட் திட்டப்பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் சென்று மோதி வெடித்தது. இந்த தற்கொலைப் படை தாக்குதல் அங்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டப்பணிகள் நடைபெறும் இடத்தில் நிகழும் இரண்டாவது தற்கொலைப் படை தாக்குதல் இது.இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தற்கொலைப் படை தாக்குதலை அடுத்து அங்கே திட்டப் பணிகளை மேற்கொண்டு வந்த சீனாவை சேர்ந்த பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது பணியை விட்டு பாகிஸ்தானை விட்டே வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
மேலும் சுமார் 2000 பாகிஸ்தான் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இங்கே 1530 மெகாவாட் திறன் கொண்ட ஹைட்ரோ பவர் திட்டப் பணிகள் நடந்த நிலையில், அது கைவிடப்பட்டதாக நிறுவனத்தின் மேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.