தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் தெக்குன் நேஷனல் பெர்ஹாட்டின் ஸ்பூமி வர்த்தகக் கடனுதவித் திட்டம் குறித்து நாடு முழுமையிலும் விரைவில் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று டத்தோ அன்புமணி பாலன் கூறினார். ஏற்கெனவே 30 மில்லியன் ரிங்கிட் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறைத் துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின் அதீத முயற்சிகளின் பலனாக குறுகிய காலத்தில் மேலும் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று அவரின் தனிச் செயலாளரான அவர் தெரிவித்தார்.
தற்போது பிரமாண்டத்தை நோக்கி ஸ்பூமி என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்டிருக்கும் இக்கடனுதவித் திட்டத்தில் ஒருவர் 50 ஆயிரம் ரிங்கிட் முதல் ஒரு லட்சம் ரிங்கிட் வரை விண்ணப்பிக்கலாம். சிறு குத்தகையாளர்கள், விவசாயம் – விவசாயம் சார்ந்த தொழில்துறை, சில்லறை வியாயாரம், சேவைகள், தயாரிப்பு, ஆன்லைன் வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழில்முனைவோர் இந்தக் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்யலாம். இந்தக் கடனுதவியானது முற்றிலும் இந்தியர்களுக்கானதாகும்.
இந்தியத் தொழில்முனைவோரைக் கைதூக்கி விடுவதற்கும் அவர்களின் வர்த்தகத் துறைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். இதற்கு மனுச் செய்யும் விதிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. கடனுதவிக்கு செய்யப்படும் விண்ணப்பத்தோடு விண்ணப்பதாரரின் அடையாளக்கார்டு நகல், எஸ்எஸ்எம் வணிக லைசென்ஸ், நடத்தும் தொழிலின் புகைப்படம், வங்கிக் கணக்கறிக்கை, வங்கிக் கணக்கு எண், 3 மாதங்களுக்குரிய வங்கிப் பரிவர்த்தனை அறிக்கை, உள்நாட்டு வருமான வரி செலுத்தியதற்கான ஆதாரம் – பதிவு எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று டத்தோ அன்புமணி பாலன் தெரிவித்தார்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு 7 வேலை நாட்களில் (விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டது) ஒப்புதல் தெரிவிக்கப்படும். இதற்கு தக்காஃபுல் காப்புறுதியும் உண்டு. இந்தக் கடனுதவியைப் பெறுவதற்காக தெக்குன் ஏஜெண்டுகளை நியமனம் செய்திருக்கவில்லை. சம்பந்தப்பட்டவர் நேரடியாக மனுச் செய்ய வேண்டும் என அவர் சொன்னார்.
18 முதல் 65 வயதுக்குட்பட்ட மலேசிய இந்தியப் பிரஜைகள் மனுச் செய்வதற்குத் தகுதி பெற்றிருக்கின்றனர். திவாலானவர் விண்ணப்பம் செய்ய முடியாது. நிறுவனம் 100 விழுக்காடு மலேசியரின் உரிமையாக இருக்க வேண்டும். வியாபாரம் நடத்துவதற்குரிய இடத்தையும் கொண்டிருக்க வேண்டும். நேரடி விற்பனை, பகுதி நேர விற்பனை, ஆன்லைன் வழி விற்பனையில் சம்பந்தப்பட்டோரும் விண்ணப்பம் செய்வதற்குத் தகுதி பெறுகின்றனர்.
ஒரு வீட்டிற்கு ஒருவர் மட்டுமே மனுச் செய்ய முடியும். ஆனால் தனி வணிக லைசென்ஸ் வைத்திருந்தால் மற்றவர்களும் இந்தக் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்யலாம். ஒரு வர்த்தகத்தில் 3 லட்சம் ரிங்கிட்டிற்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கக்கூடாது. சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருக்கும் நிறுவனத் தீர்மான பாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வருமான வரி செலுத்துவதோடு அதன் பதிவு எண்ணையும் வைத்திருக்க வேண்டும். எஸ்எஸ்எம் லைசென்ஸ் அல்லது ஊராட்சித்துறை லைசென்ஸ் வைத்திராதவர்கள் இந்தக் கடனுதவிக்கு மனுச் செய்ய முடியாது. தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அல்லது வியாபாரம் செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள தெக்குன் கிளை அலுவலகங்களில் அதிகாரிகளை நேரில் சந்தித்து தெக்குன் கடனுதவிக்கு மனுச் செய்யலாம். கடனுதவி பெற்றவர்களுக்குக் கூடுதலான அனுகூலங்களையும் தெக்குன் வழங்கும்.
மேலதிகத் தகவல்களுக்கு: www.tekun.gov.my/ms/hubungi-kami/connections/ என்ற வலைத்தளத்தை வலம் வரலாம். 2024 ஏப்ரல் 15ஆம் தேதி தொடக்கம் நாடு முழுவதும் உள்ள தெக்குன் நேஷனல் கிளை அலுவலகங்களில் மனுக்களைச் சமர்ப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் இந்தியத் தொழில்முனைவோர் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பூமி கடனுதவித் திட்டம் 2008ஆம் ஆண்டில் தொடங்கி 2024 மார்ச் வரை 28,808 இந்தியத் தொழில்முனைவோர் 450.5 மில்லியன் ரிங்கிட் கடனுதவி பெற்றிருக்கின்றனர் என்று டத்தோ அன்புமணி பாலன் கூறினார்.
-பி.ஆர்.ராஜன்