பெருநாள் காலங்களில் சாலை விபத்துகளைத் தவிர்ப்பீர்! அனைத்துவித விபத்துகளுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் தேவை

 

பி.ஆர். ராஜன்

ஒவ்வொரு பெருநாள் காலத்திலும் சாலை விபத்து என்பது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. இக்காலகட்டத்தில் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டங்கள் மேலும் அமலாக்கத் துறையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை.

பெருநாள் காலம் என்பது சாலைகளில் உயிரைப் பறிக்கும் நிகழ்வாக இருக்கக் கூடாது. பெருநாள் காலங்களில் நிகழும் சாலை விபத்துகளில் மரணம் எய்துவோர், காயமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது என்று இக்காத்தான் கொமியுனிட்டி செலாமாட் எனும் அரசு சாரா இயக்கத்தின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தை கூறினார்.

சாலை விபத்தில் ஒரு தனிநபர் உயிரிழக்கும்பட்சத்தில் அவருக்கு மட்டுமன்றி அவர் சார்ந்த குடும்பம், மனைவி, பிள்ளைகள், சமுதாயம் என ஒட்டுமொத்தத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் புலன் விசாரணை, வாகனப் போக்குவரத்து அமலாக்க இலாகா வெளியிட்டிருக்கும் ஒரு தரவுகளின் படி 2023 ஜனவரி 1 தொடங்கி டிசம்பர் 30ஆம் தேதி வரை 600,000 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதே காலகட்டத்தில் கிட்டத் தட்ட 6,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த எண்ணிக்கையானது சாலை விபத்துப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டிய அவசியத்தைத் தெள்ளத் தெளிவாக நிரூபிக்கிறது என்று டான்ஸ்ரீ லீ குறிப்பிட்டார்.

வயது, ஒருவர் செய்யும் வேலை ஆகியவற்றைப் பொறுத்து இந்த விபத்துகள், நிகழ்வதில்லை. சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் மூத்த பிரஜைகள், சிறார்கள், கைக்குழந்தைகள், தொழிலாளர்கள் எனப் பல்வேறு வயதிலானவர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கும் நிலையில் அவரின் குடும்பத்தார் எதிர்நோக்கும் இன்னல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். மிகப்பெரிய தாக்கத்தை இந்த மரணங்கள் ஏற்படுத்துகின்றன. ஒரு குடும்பம் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை இழக்கிறது.

அதேசமயம் காயமடைபவர்களுக்கு செலவிடப்படும் மருத்துவ நிதி, அந்தக் குடும்பம் எதிர்நோக்கும் வாழ்வாதாரச் சவால்கள் ஆகியவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வீட்டிலிருந்து பணியிடத்திற்குச் செல்லும் போதும் அதேபோன்று பணியிடத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்பும்போதும் நிகழக்கூடிய சாலை விபத்துகளுக்கும் பெர்கேசோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் உரிய பாதுகாப்பை வழங்குகிறது. வேலை நேரத்திற்குப் பின்னர் வெளியில் நிகழக்கூடிய விபத்துகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இருப்பதில்லை.

விடுமுறைக் காலங்களில் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக இருப்பதற்குச் செல்லும்போது ஏற்படக்கூடிய விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு எவ்வித இழப்பீடும் இல்லை என்பதை டான்ஸ்ரீ லீ சுட்டிக்காட்டினார்.

எனவே வேலை நேரத்திற்குப் பிறகும் விடுமுறைக் காலத்திலும் நிகழக்கூடிய அனைத்து விதமான விபத்துகளுக்கும் பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை முழுமையாகவும் விரிவாகவும் ஆய்வு செய்ய வேண்டிய காலம் கனிந்திருக்கிறது என்று அவர் கூறினார்.

இதற்கான தனிநபர் காப்புறுதித் திட்டம் ஒரு தேர்வாக இருந்தாலும் உண்மை நிலையில் மக்கள் தொகையில் மிகப்பெரும் பான்மையானோர் காப்புறுதி வாங்குவதற்குரிய வசதியைக் கொண்டிருக்கவில்லை. மேலும் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் வழங்கக்கூடிய பாதுகாப்பும் ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கின்றன. முழுமை பெற்றதாக அவை இருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சமூக அந்தஸ்து அல்லது ஒருவர் செய்யும் வேலை ஆகியவற்றை மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளாமல் அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கக்கூடிய விரிவுபடுத்தக் கூடிய ஒரு திட்டத்தை பெர்கேசோ நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மருத்துவச் செலவு இழப்பீடு, வருமான இழப்பீடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி ஆதரவு போன்றவற்றை இத்திட்டம் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார். அதே வேளையில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஒரு தீர்வைக் காண்பது அரசாங்கத்தின் பொறுப்புடைமையாகும். இது தவிர விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவிகள் வழங்குவது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக பயணிப்பதற்கு மிகவும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்கு சாலை கட்டமைப்பையும் வசதிகளையும் தரஉயர்வு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. சாலைப் பயனீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று தமது பரிந்துரையை டான்ஸ்ரீ லீ முன்வைத்தார்.

இத்திட்டம் வெற்றி பெறுவதற்கு மக்கள் அனைவரும் அதீத ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமாகும். ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கு நிறைவான, முழுமையான தீர்வைக் காண முடியும்.

ஹரிராயா பெருநாளைக் கொண்டாடுவதற்கு இல்லம் திரும்பும் பொதுமக்கள் போதுமான ஓய்வெடுத்திருக்க வேண்டும். திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சாலை விதிமுறைகளை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். வாகனங்களை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். நம் அனைவரின் பாதுகாப்புக்காக இதனை நினைவில் கொள்வோம் என்று டான்ஸ்ரீ லீ லாம் தை வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here