அதிபர் மகளின் டைரியை திருடிய பெண்ணுக்கு சிறைவாசம்; அமெரிக்காவில் தேர்தல் அதிரடி

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகளின் டைரியைத் திருடி, அரசியலில் எதிர் முகாமான டொனால்ட் டிரம்ப் குழுவுக்கு விற்ற பெண் சிறைத் தண்டனைக்கு ஆளாகி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த முறை போட்டியாளர்களான ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் இடையே மீண்டும் நேரடி மோதல் எழும் சூழல் நெருங்கி வருகிறது. இதனிடையே கடந்த தேர்தலின்போது, பைடனின் இரகசியங்களை வெளிக்கொணர செய்ய அவரது மகள் டைரியை திருடி டிரம்ப் முகாமுக்கு விற்ற பெண்ணுக்கு தற்போது நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகளான ஆஷ்லே பைடனின் டைரியை திருடி விற்றதற்காக, ஃபுளோரிடாவை சேர்ந்த ஐமி ஹாரிஸ் என்ற பெண்ணுக்கு 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாத தண்டைனையை சிறையிலும், ஏனைய 3 மாதங்களை வீட்டுச் சிறையிலும் கழிக்க அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் சலுகை வழங்கியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்னர் புராஜெக்ட் வெரிடாஸ் என்ற ஜோ பைடன் எதிர்ப்பு ஊடகக் குழுவுக்கு அவரது மகளின் டைரியை விற்றதாக ஐமி ஹாரிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. மான்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி லாரா டெய்லர் ஸ்வைன், ஹாரிஸின் நடவடிக்கைகள் ’படு கேவலமானவை’ என்று விவரித்தார்.

ஃபுளோரிடாவில் வசிக்கும் ஐமி ஹாரிஸ், ஜோ பைடன் மகள் ஆஷ்லே பைடனின் டைரி மட்டுமன்றி, அவரது டிஜிட்டல் சேமிப்பகம், புத்தகங்கள் உள்ளிட்ட பலவற்றையும் திருடி விலைக்கு விற்றிருக்கிறார். 2020-ம் ஆண்டு ஃபுளோரிடாவின் டெல்ரே கடற்கரையில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் இதை அவர் கண்டுபிடித்தார். முன்னதாக அங்கே தங்கிச்சென்ற ஆஷ்லே பைடன், பாதுகாப்பின் பொருட்டு அங்கே விட்டுச்சென்றவற்றை ஐமி ஹாரிஸ் கைப்பற்றினார்.

இந்த குற்றத்துக்காக ஐமி ஹாரிஸ் பின்னர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் தனது தவறை உணர்ந்து விட்டதாக கதறினார். ஆஷ்லே பைடனின் தனிப்பட்ட எழுத்துக்களை விற்றதற்காகவும், அவரது அந்தரங்க வாழ்க்கையை பகிரங்கம் செய்ததற்காகவும் ஹாரிஸ் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டார்.

 8 மற்றும் 6 வயதுடைய தனது இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதில் எழுந்துள்ள தடுமாற்றமே, இந்த குற்றச் செயலுக்கு தூண்டியதாக அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். குடும்ப வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளான இல்லத்தரசி என்பதால் நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

ஜோ பைடன் மகளின் டைரி உள்ளிட்ட உடமைகளை டொனால்ட் டிரம்ப் சார்பு குழுவினரிடம் 40,000 டாலருக்கு விற்றதை ஐமி ஹாரிஸ் ஒப்புக்கொண்டார். அவற்றை விலைக்கு வாங்கிய புராகெஜ்ட் வெரிடாஸ் அமைப்பு தன்னை ஒரு செய்தி நிறுவனமாக முன்னிறுத்தியதால் அரசியல் பின்னணியுடன் தன்னை பாதுகாத்துக்கொண்டது. ஆனால் ஐமி ஹாரிஸ் மாட்டிக்கொண்டார். தற்போது மீண்டும் பைடன் – டிரம்ப் இடையிலான மோதலுக்கு வாய்ப்பாகி உள்ளதால், முந்தைய தவறு மீண்டும் நடக்காதிருக்க எச்சரிக்கையாகவும் ஐமி ஹாரிஸ்க்கான சிறைத்தண்டனை பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here