போவ்லிங் போட்டியில் 45 பேர் பங்கேற்பு

கே. ஆர். மூர்த்தி

கூலிம், ஏப். 12-

கெடா மாநில தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவை ஏற்பாட்டில் கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர், கூலிம் பண்டார் பாரு தொகுதி பிரிபூமி கட்சியின் ஆதரவோடு போவ்லிங் போட்டி நடத்தப்பட்டது.

கூலிம் தாமான் செலாசே பகுதியில் அமைந்துள்ள கூலிம் செண்ட்ரல் லேன் மார்க் போவ்லிங் அரங்கில் போவ்லிங் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டதாக முன்னாள் பேரவையின் செயலாளர் வி. நாகன் தெரிவித்தார்.

கெடா மாநில தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் க.கணேசன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்லான் பின் ஹாசிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் தொடங்கிய சகோதரத்துவ உறவு மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவையில் நீடிக்க வேண்டும் என்று தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவை தொடங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இப்பேரவையில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுசேரும் பொருட்டு சகோதரத்துவ முறையில் இப்போட்டி முதல் முறையாக பேரவையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

கெடா மாநிலத்தில் அமைந்துள்ள அலோர்ஸ்டார், கோலமூடா, பாலிங், கூலிம் இப்படி பல்வேறு மாவட்டங்களிலிருந்து 45 மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொண்டனர்.

இப்போட்டிக்கான பரிசுகள் அனைத்தையும் கெடா மாநில முன்னாள் தமிழ் இளைஞர் மணி பேரவைத்  தலைவரும்  மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவை ஆலோசகருமான கரு. சுப்பிரமணியம் நன்கொடையளித்தார்.

போட்டியில் வெற்றிபெற்ற  முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை வெற்றியாளர்களுக்கும் போட்டியில் அதிகமான புள்ளிகள் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்தப் பரிசுகளை ரோஸ்லான் பின் ஹாசிம், கரு.சுப்பிரமணியம் ஆகிய இருவரும் எடுத்து வழங்கினர்.

கெடா மாநில தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவையில் இணைந்துள்ளவர்களில் ஏப்ரல் மாதம் பிறந்த அறுவருக்கு பிறந்த நாள் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதோடு போட்டியில் கலந்துகொண்டவர்கள், பார்வையாளர்களாக கலந்துகொண்ட அனைவரும் பங்குபெறும் பொருட்டு சிறப்பான பரிசுகளோடு அதிர்ஷ்டக்குலுக்கு நடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here