“டவுன் சின்ட்ரம்” சோலைராஜ் மீது சுடுநீர் வீச்சு -அலறித் துடித்தார்

கோலாலம்பூர்:

மின்தூக்கியில் ஒரு பெண் ஒருவர் சுடுநீர் ஊற்றியதைத் தொடர்ந்து டவுன் சின்ட்ரம் மாற்றுத்திறனாளியான என் அண்ணன் சோலைராஜ் (வயது 33) வலியால் துடித்து என் தாயாரிடம் ஓடிவந்ததாக அவரின் தங்கை கிருஷ்ணா ஹர்மி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் பாயான் லெப்பாஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் இரவு வேலை முடிந்து அப்போதுதான் வந்து படுத்தேன். காலை 10.00 மணி அளவில் என் அம்மா என்னை எழுப்பி இந்தத் தகவலை சொன்னார்.

வலியால் என் அண்ணன் துடிப்பதாகவும் அவரின் உடலில் சுடுநீர் ஊற்றப்பட்டதால் வெந்து வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். அதுவும் என் அண்ணன் தானாகவே 16ஆவது மாடியில் உள்ள எங்கள் வீட்டிற்கு ஓடிவந்து என் அம்மாவை அழைத்துள்ளார்.

பதறியடித்த நான் சிறிது நேரம் அவரைக் காற்றாடி அருகே உட்கார வைத்து பாயான் லெப்பாசில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்து அவர் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனக்குத் தெரிந்தவரையில் என் அண்ணனுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை. மாற்றுத் திறனாளி என்கிறபோதும் அவர் அனைவரிடமும் அன்பாக பழகுவார். தனியாக கடைக்குச் சென்று வருவார் என்று கூறினார்.

என் அண்ணன் மீது சுடுநீர் ஊற்றிய பெண்ணை எங்களுக்குத் தெரியாது. அவர் அந்தக் குடியிருப்பில் வசித்தாலும் நாங்கள் அவரிடம் பேசியதில்லை. மாறாக அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.

எனவே குடியிருப்பு நிர்வாகத் தரப்பை தொடர்புகொண்டு என்ன நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய சிசிடிவி கேமராப் பதிவை ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டோம் என்று நேற்று பினாங்கு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணா கூறினார்.

14 உடன்பிறப்புகளுள் 13ஆவது பிள்ளையான என் அண்ணனுக்கு நியாயம் கிடைக்க வழக்கறிஞரை நாடியுள்ளோம். பாதிக்கப்பட்டவரின் தோள் பகுதியில் 6 விழுக்காடு வரையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காயம் முழுமையாகக் குணமடைய இரு வாரங்களாகும் என பினாங்கு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கோ ஹின் குவாங் தெரிவித்துள்ளார்.

இந்தக் காயமானது சுடுநீர் ஊற்றப்பட்டதால் ஏற்பட்டிருக்கிறது என்பது மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர் தற்போது தீப்புண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குணமடையும் செயல்பாடுகள் சீராக நடந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார். ஆனாலும் இந்தக் காயம் குணமடைவதைக் கண்காணிக்க போதிய கால அவகாசம் தேவை எனவும் அவர் கூறினார்.

இதனிடையே நேற்று பினாங்கு மாநில சமூக, நல, முஸ்லிம் அல்லாதார் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் மருத்துவமனைக்கு வந்து சோலைராஜிடம் நலம் விசாரித்தார்.

மேலும் அவருக்கு 500 ரிங்கிட் உதவி நிதி வழங்கியதுடன் மேலும் தேவைக்கேற்ப உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் லிம் கூறினார்.

நான் அவருடன் 40 நிமிடங்கள் வரை உரையாடினேன். சோலைராஜ் மிகவும் திறமையானவர் என நான் கருதுகிறேன். அவர் பேச்சுத் திறனில் சிறிதளவு பிரச்சினை இருந்தாலும் எனக்கு உணவு வாங்கித் தருவதாக கலகலப்பாகப் பேசினார்.

அதேசமயம் இந்தச் சம்பவத்திற்கு நான் கண்டனமும் வருத்தமும் தெரிவிக்கிறேன். மக்கள் இன்னும் கவனமுடன் குறிப்பக இவர் போன்ற சிறப்பு மனிதர்கள் விவகாரத்தில் கூடுதல் அக்கறையுடன் இருக்குமாறு வலியுறுத்துவதாகவும் லிம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here