‘பத்து தல’ படத்திற்குப் பின் இப்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் கமிட் ஆகி நடிக்கிறார் சிம்பு. இரண்டு மே அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகின்றன என்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.
‘தக் லைஃப்’ படத்தில் கமல், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி என பலர் நடிக்கிறார்கள். கமல் இதில் ரங்கராயா, சக்திவேல், நாயகர் ஆகிய மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைக்கிறார்.
ஜெய்சால்மாரில் நடந்து வரும் இந்த ஷெட்யூலில் கமல், த்ரிஷா தவிர சிம்பு, கௌதம் கார்த்திக், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி எனப் பலர் இணைந்துள்ளதாக சொல்கிறார்கள். ‘தக் லைஃப்’பில் சிலம்பரசன் இணைந்தது எப்படி என்பது குறித்து விசாரித்தால், ஆச்சரியமான தகவலைச் சொல்கிறார்கள்.
“துல்கர் சல்மான் இந்தப் படத்தில் இணைவதற்கு முன்னரே, சிம்புவிடம்தான் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். மணிரத்னத்திடம் இருந்து வந்த வாய்ப்பு என்பதாலும், இந்தப் படத்தில் சிம்புவிற்கு பிரமாதமான கதாபாத்திரம் என்பதாலும், கமல் என்பதாலும் உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் சிம்பு. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடி த்ரிஷா என்கிறார்கள். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’விற்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. தவிர கமல், த்ரிஷா ஆகியோரின் காம்பினேஷனிலும் நடிக்கப் போகிறார் சிம்பு.
ராஜஸ்தான் ஷெட்யூலை அடுத்து டெல்லியிலும் படப்பிடிப்பு நடக்கப் போகிறது. அநேகமாக டெல்லியில் மூன்று வாரங்கள் படப்பிடிப்பு இருக்கும் என்றும் தகவல். அந்த ஷெட்யூலிலும் சிம்பு இருக்கிறார். இதற்கிடையே அவரது ‘எஸ்.டி.ஆர் 48’க்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. ‘Blood and Battle’ ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் ‘எஸ்.டி.ஆர் 48’ ஒரு வரலாற்று ஆக்ஷன் படமாகும். முழுக்க முழுக்க உள் அரங்கங்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக கிராபிக்ஸ் குழு அறிவுறுத்தலில் ஸ்டோரி போர்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜ் கமல் அலுவலகத்தில் கிராபிக்ஸ் வல்லுநர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் இதற்காக வேலை செய்து வருகின்றனர். ‘தக் லைஃப்’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்து ‘எஸ்.டி.ஆர் 48’ படப்பிடிப்பை சிம்பு ஆரம்பிப்பாராம்..