பெட்டாலிங் ஜெயா:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவி, தான் இன்னமும் தனது மனைவியை நேசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“என் மனைவி ஃபாரா முஹமட் இஸாவை நான் இன்னமும் நேசிக்கிறேன். மிக்க நன்றி,” என்று இன்று காலை, கோத்தா பாரு நீதிமன்றத்தை அடைந்தபோது செய்தியாளர்களிடம் ஹஃபிசுல் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் ஹஃபிசுலின் தடுப்புக்காவல் மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்த தமது மனைவியைக் குறிவைத்து ஹஃபிசுல் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் குறி தவறிய தோட்டா அவரது மனைவியின் மெய்க்காப்பாளரது வயிற்றில் பாய்ந்தது.
அங்கிருந்து தப்பிச் சென்ற ஹஃபிசுல் கிட்டத்தட்ட 38 மணி நேரம் கழித்து, கிளந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த மெய்க்காப்பாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதியன்று அவருக்குச் சுயநினைவு திரும்பியது குறிப்பிடத்தக்கது.