சென்னை: வட இந்தியாவில் பறிபோகும் சீட்களை ஈடுகட்ட தெற்கை குறி வைத்துள்ளது பாஜக, தென்னிந்தியாவின் தேர்தல் முடிவுகள் இந்த முறையும் பாஜகவுக்கு மரண அடிதான் எனக் கூறியுள்ளார் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகை தருவது, தமிழில் பேசுவது, தமிழ் மொழியை உயர்த்திப் பிடிப்பது, தென்னிந்தியாவில் தங்கள் இருப்பை வலுப்படுத்துவதற்கான பாஜகவின் முயற்சிகள், அதனை எதிர்கொள்வதில் இருக்கும் சவால்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வடக்கிலேயே பாஜகவுக்கு சரிவு: தென் இந்தியாவில் பாஜகவின் முயற்சிகள் பற்றி ஸ்டாலின் கூறுகையில், வட இந்தியாவிலேயே பாஜகவின் செல்வாக்கு குறைந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் மக்கள் விரோத மோடி அரசால் பாதிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினரும், முக்கியமாக ஏழைகள், விவசாயிகள், வணிகர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், மீனவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் தவறான ஆட்சியின் வலியை அனுபவித்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவு பணவீக்கம் மற்றும் வேலையின்மை காரணமாக மோடியின் ஏமாற்று அம்பலமாகியுள்ளது. மேலும், வட இந்தியாவில் பாஜகவின் பிம்பம் சிதைந்துள்ளது. வட இந்தியாவில் தங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பாஜக தலைமை தென்னிந்தியாவில் கவனம் செலுத்துகின்றனர் எனக் கூறியுள்ளார்.
வடக்கு இழப்பை ஈடுகட்ட தெற்கில் கூடுதல் கவனம்: மேலும் பேசியுள்ள ஸ்டாலின், “பிரதமர் மோடி ரோடு ஷோக்களை நடத்தி வருகிறார். பாஜக என்னென்னமோ செய்து பார்க்கிறது. பாஜகவின் இந்த வீண் முயற்சிகள் மற்றும் மோடியின் பிரச்சாரங்களை மீறி கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜகவின் எழுச்சி என்பது வெறும் கற்பனை தான். தமிழ்நாடு எப்போதும் போல் மதச்சார்பற்ற சக்திகளின் கோட்டையாகவே இருக்கும். தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இந்த முறையும் பாஜகவுக்கு மரண அடி கொடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.



















