பி.ஆர். ராஜன்
இந்தியர்கள் தம்மீது இன்னமும் கோபமாகத்தான் இருக்கிறார்களா? என்ன செய்தால் அவர்களின் மனம் குளிரும் என்று பிரதமரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் நடைபெற்ற பிகேஆர் கட்சி சந்திப்பில் கேட்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
அன்வாரை பிரதமராகப் பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பதற்கு மலேசிய இந்திய சமுதாயம் மிகக் கடுமையாகப் பாடுபட்டிருக்கிறது. கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் அன்வாருக்காக அவர்கள் நடத்தியப் போராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இது அன்வாருக்கு நன்றாகவே தெரியும். மலேசிய அரசியல் வரலாற்று தடத்தில் இது உறுதியாக பதிந்திருக்கிறது.
ஆனால், இதற்குக் கைமாறாக அன்வார் என்ன செய்தார் என்பதுதான் இப்போது இந்திய சமுதாயம் தனக்குள் கேள்விக் கேட்டுக்கொண்டிருக்கிறது. விடைதான் கிடைத்தபாடில்லை. பஞ்சமில்லாத ஏமாற்றங்கள்தான் தொடர்கதையாக இருக்கின்றன.
இந்திய சமுதாயத்திற்கு என்ன தேவை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் தம்முடைய கட்சிக்காரர்களிடம் அவர் இது குறித்து ஓர் ஆய்வையே நடத்திக் கொண்டிருக்கிறார். இதற்கும் ஒரு காரணமும் இருக்கிறது.
வரும் மே 11ஆம் தேதி கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றிபெற்றாலும் தோற்றாலும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
இருப்பினும், இதுவொரு தன்மான இடைத்தேர்தலாகவே அமைந்திருக்கிறது. பெரிக்காத்தான் நேஷனல் மிகக் கடுமையான போட்டியைத் தரக்கூடிய நிலையில் இருக்கிறது. மலாய்க்காரர்களின் ஆதரவு பெரிக்காத்தான் கூட்டணிக்கே சாதகமாக இருக்கிறது. இதனை முறியடிக்கவேண்டும் என்பதுதான் பக்காத்தான் ஹராப்பானின் இலக்காக உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கெராக்கான் கட்சி சார்பில் ஒரு சீன வேட்பாளர்தான் இங்கு களமிறக்கப்படுகிறார் என்று நம்பப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இத்தொகுதியிலுள்ள மலாய் வாக்காளர்கள் இவருக்கு வாக்களிப்பார்களா என்ற ஒரு விவாதமும் தலைதூக்கியிருக்கிறது.
பெரிக்காத்தான் நேஷனலைப் பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் அதன் செல்வாக்கை நிரூபிப்பதற்காக ஒரு போராட்டத்தை அது முன்னெடுத்திருக்கிறது. இதனால், மலாய்க்காரர்களின் ஆதரவும் இந்திய வாக்காளர்களின் ஆதரவும் தங்களுக்குக் கிடைக்கும் என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருக்கிறது. அதற்கான வியூகங்களையும் அது வகுத்துள்ளது.
இந்த நிலைதான் அன்வாரின் இந்த ஆய்வுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆட்சியில் முதன்முறையாக டத்தோஸ்ரீ அன்வாரின் அமைச்சரவையில் தமிழ் பேசும் ஒரு முழு அமைச்சர் இல்லாதது இந்தியர்களின் மத்தியில் ஒரு மிகப் பெரிய ஏமாற்றமாகவும் வலியைத் தரக்கூடியதாகவும் இருக்கிறது.
மடானி அமைச்சரவையில் தமிழ் பேசக்கூடிய ஒரு முழு அமைச்சரை நியமிப்பதால் இந்த அரசாங்கம் எதை இழக்கப் போகிறது? அன்வார் சிந்திக்க வேண்டும். அமைச்சரவையில் இந்தியர்களைப் பிரதிநிதிப்பதற்கு ஒரு முழு அமைச்சர் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றமாகவே இன்றளவும் இருக்கிறது.
அமைச்சரவையில் தமிழ் பேசக்கூடிய ஒரு முழு அமைச்சரை நியமிக்காததற்கு என்ன காரணம்? இந்திய சமுதாய நலன்களைக் காப்பதற்கு அன்வார் தவறிவிட்டார் என்பதுதான் சமுதாயத்தின் கோபமாக இருக்கிறது.
அடுத்ததாக, டத்தோஸ்ரீ நஜிப் காலத்தில் இந்திய சமுதாய மாணவர்களுக்காக வழங்கப்பட்ட 2,200 மெட்ரிகுலேஷன் இடங்கள் அபகரிக்கப்பட்டதற்கும் என்ன காரணம்? இதற்கும் இன்றளவும் ஒரு தெளிவான விளக்கமோ பதிலோ இல்லை.
மேலும், ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களுடனான சந்திப்பின்போது ஓர் இந்திய மாணவி எழுப்பிய கேள்விக்கு அன்வார் மிக அலட்சியமாக பதில் தந்ததும் இந்திய சமுதாயத்தின் இதயங்களை கீறிப் பார்த்திருக்கிறது. அந்த வேதனை இன்னும் அடங்கவில்லை.
இது தவிர கிள்ளானில் ஒரு பள்ளிவாசலில் ஓர் இந்துவை மதம் மாற்றிய சம்பவமும் இந்திய சமுதாயத்தின் இதயங்களில் ஒரு காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளை அவர் முறையாக அணுகுவதில்லை என்ற கோபமும் சமுதாயத்தின் மத்தியில் நிலவுகிறது. வரும் 16ஆவது பொதுத்தேர்தலுக்குள் இவற்றையெல்லாம் சரி செய்தால் அடுத்தப் பிரதமரும் அன்வார்தான் என்பதை இந்திய சமுதாயம் உறுதி செய்யும்.
கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 18 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டு ஆதரவு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வேண்டுமென்றால் இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உரிய தீர்வைக் காண வேண்டும்.
இந்த 60 விழுக்காட்டு ஆதரவைப் பெறுவதற்குத்தான் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் கணக்குப் போட்டு அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.