கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் வீட்டுப் பிரச்சினை தலையெடுத்திருக்கிறது.லாடாங் மேரி, லாடாங் சுங்கை திங்கி, லாடாங் நைகல் கார்டனர், லாடாங் மின்ஞாக், லாடாங் புக்கிட் திங்கி ஆகிய ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த பாட்டாளிகள் இந்தப் பிரச்சினையைத் தற்போது கையில் எடுத்திருக்கின்றனர்.
தகவல் ஊடகங்களில் அவர்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் மிகப் பெரிய மன வலியைத் தருகிறது என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.இந்தத் தோட்டங்களில் வாழும் மக்கள் குடியிருப்பு வசதிகள் இன்றி சிரமப் படுகின்றனர் என்று பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் நூருல் ஷஸ்வானி தமக்குத் தகவல் தெரிவித்ததாக அவர் சொன்னார்.இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மாநில– மத்திய அரசாங்கத்திற்கும் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பி ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் அச்சந்திப்புக் கூட்டம் 13.2.2024 தம்முடைய சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது என்றும் அவர் கூறினார்.
பல கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் சம்பந்தப்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த பாட்டாளிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தகவல்களை முன்வைத்தனர்.இந்தக் கலந்துரையாடலை பாதிக்கப்பட்ட தோட்டங்களில் வாழும் பாட்டாளிகளின் பிரதிநிதிகளுடன் மட்டுமே நான் நடத்தினேன். ஆனால், தற்போது இந்த விவகாரம் வேறு மாதிரியாக திரிக்கப்பட்டு எதிர்மறையான குற்றச்சாட்டுகளை என் மீது வைக்கும் காணொளிகளைக் கண்டு தாம் மிகுந்த வேதனை அடைவதாக பாப்பாராய்டு கூறினார்.
அச்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்பதற்கேற்ப யாருக்கும் அஞ்சாமல் நாட்டிற்கும் மக்களுக்கும் எனது சேவையை செவ்வனே செய்து வருகிறேன்.இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குக் கடுமையாகப் பாடுபடுவேன். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. என் சமுதாய மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களை மகிழ்ச்சி வாழ வைப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம், போராட்டம்.அடுத்தக் கட்ட சந்திப்புக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம். இதற்கு மத்தியில் சம்பந்தப்பட்ட தோட்டங்களில் வாழும் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கு 20 ஏக்கர் நிலத்தைத் தருவதற்கு பெர்ஜெயா வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனம் முன்வந்திருக்கிறது.இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்திருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று பாப்பாராய்டு சொன்னார்.