சென்னை: சென்னையைச் சேர்ந்த இரட்டைக் கையை இழந்த தான்சென் என்ற 31 வயது இளைஞர், தமிழகத்தின் முதல் கார் ஒட்டுநர் உரிமம் பெற்ற மாற்றுத்திறனாளி (இரண்டு கை இழந்தவர்) என்ற சாதனையை படைத்துள்ளார்.இரண்டு கை மற்றும் இரண்டு கால்கள் நன்றாக உள்ளவர்களே இன்றைக்கு கார் ஓட்டி லைசென்ஸ் வாங்குவது எளிதானது அல்ல.. ஆனால் இரண்டு கைகளையும் இழந்த தான்சென் என்ற 31 வயது இளைஞர், தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். விடா முயற்சி மற்றும் நம்பிக்கை, போராட்டம் என இதற்காக அவர் நடத்திய அத்தனை விஷயங்களும் அசாத்தியமானது.
சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்த 31 வயதாகும் தான்செனுக்கு 10 வயது இருக்கும் போது, உயர் அழுத்த கம்பியில் சிக்கியதால் அவரது கைகள் முழங்கைக்கு கீழே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை கண்டு ஆரம்பத்தில், அவரும் அவரது குடும்பத்தினரும் பெரும் சோகத்திற்கு ஆளாகினார்கள். மின்சார விபத்தில் மூட்டுக்கு கீழ் இரண்டு கைகளையும் இழந்த போதிலும், நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. படிப்படியாக தனது அன்றாட வேலைகளை யார் உதவியும் இல்லாமல் அவரே செய்ய கற்றுக்கொண்டார். ஒரு வழியாக கால்கள் மூலம் எழுதவும் கற்றுக்கொண்ட அவர், நீந்தவும் டிரம்ஸ் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அத்துடன் படிப்பிலும் சாதித்தார். விடாமுயற்சியால் இன்ஜினிரியங் படித்து முடித்த பின், பி.எல். படித்த தான்சென், தற்போது எம்.எல். படித்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் மகள் இருக்கிறார்.
இவருக்கு கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தொழிலதிபர் ஸ்ரீவாரி சங்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்களின் உதவியுடன் கார் ஓட்டுவதற்கு தான்சென் கற்றுக்கொண்டார். ஆனால் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தபோது நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னை கே.கே. நகரில் உள்ள புனர்வாழ்வு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, அவருக்கு ஏற்ப காரின் வடிவமைப்பை மாற்றியமைக்க வலியுறுத்தினார்கள். பின்னர் மாற்றுத்திறனாளியான வழக்கறிஞர் தான்செனிடம், கியர் முறையைக் கையாளும்படி அறிவுறுத்தினார்கள்.
மருத்துவமனையின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குநர் திருநாவுக்கரசு மற்றும் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி ரெட்டேரி ஆர்டிஓ அலுவலகத்தில் தான்சென் ஓட்டுநர் உரிமத்தை பெற்றார். தமிழகத்திலேயே முதல்முறையாகவும், நாட்டில் மூன்றாவது நபராகவும் இரண்டு கைகள் இல்லாத ஒருவர், கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஓட்டுர் உரிமம் பெற்றார்.




















