சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்று முடிவுசெய்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருதரப்பு நலன்கள், அணுக்கமான பொருளியல் ஒத்துழைப்பு, நெருங்கிய மக்கள் தொடர்பு என இந்தியாவும் சிங்கப்பூரும் மிக அணுக்கமான உத்திபூர்வ பங்காளித்துவத்தைக் கொண்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

“இத்தகைய சிறந்த உறவைக் கருத்தில்கொண்டு, சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு தேவைகளைச் சமாளிக்க ஏதுவாக, அந்நாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் தொடர்பில் முறையான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும்,” என்று அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் பாசுமதி தவிர்த்த மற்ற வகை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது.

இந்நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி வரை புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கும் 20 விழுக்காடு வரி விதிப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா அறிவித்தது.

உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 விழுக்காட்டிற்கும் மேலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “அரிசி ஏற்றுமதி தடை நீங்கியது நல்லதுதான். அரிசி வரத்து இப்போதைக்கு குறைவு இல்லையெனினும், தட்டுப்பாடு வரலாம் என நினைத்தோம். அதற்குள்ளாக தடை நீங்கியது நன்மை தான். ஆனாலும் இப்போதைக்கு பழைய கையிருப்பை விற்பனை செய்வதால் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை. மேலும், மக்கள் ஏற்கனவே அரிசி வாங்கி வைத்துக் கொண்டுள்ளதால் விற்பனையும் அதிகம் இல்லை. குறைந்தது ஒரு மாதத்திற்கு பிறகு தான் இந்த அறிவிப்பின் பலன் என்னவென்று தெரிய வரும்” என்கிறார்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here