பி.ஆர்.ராஜன்
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 தோட்டங்களைச் சேர்ந்த 245 பாட்டாளின் மனங்களை குளிர வைக்கும் ஒரு செய்தி 2024 மே 6 ஆம் தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
இந்த மக்களின் 26 ஆண்டுகள் காத்திருப்புக்கு கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் ஒரு புதிய விடியலை கொண்டு வந்திருக்கிறது.

வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங், சிலாங்கூர் மாநில மனிதவளம், ஏழ்மை துடைத்தொழிப்பு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு ஆகிய இருவரும் லாடாங் சுங்கை திங்கியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிபிஆர் வீடமைப்பு திட்ட இடத்தில் மே 6, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
1998 ஆம் ஆண்டு தொடங்கி இந்த வீட்டுடமை பிரச்சினை நீர் பூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்தது.
மேரி, நைகல் கார்டனர், புக்கிட் தாகார், சுங்கை திங்கி, மிஞ்ஞாக் ஆகிய 5 தோட்டங்களின் பாட்டாளிகளுக்கு இந்நாள் ஒரு பொன்னாளாக அமையட்டும். ஒற்றுமையுடன் முன்னெடுக்கப்பட்ட இப்போரட்டம் பாட்டாளி சமுகத்திற்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கிறது.

இந்த வெற்றிக்கு அயராது உழைத்தவர்கள், விடாது போராடியவர்கள், பக்கப்பலமாக இருந்தவர்கள், அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியவர்கள் அனைவரும் நன்றிகுரியவர்கள்.
அனைவருக்கும் மேலாக 26 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்த பாட்டாளி மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சம்பந்தப்பட்ட தோட்டங்களை சேர்ந்த பாட்டாளிகள் அமைதி மறியலில் இறங்கினர்.

வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும். அதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.
தங்களின் மன வலியை இதைவிட வேறு எப்படி தான் அவர்களால் வெளிக்காட்ட முடியும்?
கிட்டத்தட்ட 500 வாக்காளர்களின் ஆதரவை இழக்க பக்காத்தான் ஹராப்பான் தயாராக இல்லை.

விரைந்து களமிறங்கினார் பாப்பா ராய்டு. கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்தார். சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் அறிக்கை சமர்ப்பித்து வீடமைப்பு திட்டத்திற்கு ஒப்புதலும் பெற்றார். இந்த திட்டம் தான் திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. பாட்டாளி மக்களுக்கு நல்லது நடக்கப் போகிறது.




















