மலேசியாவின் AI, 5G, டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை நடைபோடுகிறார் கோபிந்த் சிங் டியோ

உலகின் மிகப்பெரிய அரசாங்க ஆன்லைன் தளமான இங்கிலாந்தை தளமாகக் கொண்ட அபோலிட்டிகல், மலேசியாவின் செயற்கை நுண்ணறிவு (AI), 5G மற்றும் இலக்கவியல் உருமாற்றத்தை  அசுர வேகத்தில் முன்னெடுக்கும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் முயற்சிகளை அங்கீகரித்துள்ளது. அபோலிட்டிகலின் சமீபத்திய தி கவர்மென்ட் AI 100பட்டியலில் உலகெங்கிலும் உள்ள செயற்கை நுண்ணறிவு வல்லுனர்கள், தொழில்நுட்ப முன்னோடித் தலைவர்கள் இடம் பெற்றிருக்கும் பட்டியலில், கோபிந்த் சிங் டியோவின் பெயர்  இடம்பெற்றுள்ளது நம்மை பெருமை கொள்ள வைக்கிறது.

தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகத்தை (NAIO) நிறுவியது உட்பட, மலேசியாவின் அரசாங்க பொதுத்துறையை  செயற்கை நுண்ணறிவின் வழி நவீனமயமாக்கும் பல்வேறு முயற்சிகளுக்கு கோபிந்த் முக்கிய பங்கு வகித்தார் என்பதை இந்தப் பட்டியல் எடுத்துக்காட்டுகிறது. சைபர் பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்துதல், தனிநபர் தரவு பாதுகாப்பை நவீனமயமாக்குதல், மேலும் அரசு நிறுவனங்கள் பொறுப்போடு தரவு பாதுகாப்பை கடைபிடிக்க, தரவு பகிர்வு மசோதாவை முன்மொழிதல் போன்ற, நம்பகமான AI பயன்பாட்டை ஆதரிக்கும் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை முயற்சிகளில் அவர் வழங்கிய தலைமைக் பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்படுகிறார்.

2023 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து மலேசியாவை இலக்கவியல் நாடாக உருமாற்றும் பணித்திட்டத்தை வழிநடத்தி வரும் இலக்கவியல் அமைச்சின் பணியாளர்களுக்கு கோபிந்த் சிங் தனது பாராட்டுகளை பதிவு செய்தார்.. மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை ‘AI நாடாக மாற்றும் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதில் அமைச்சு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அபொலிட்டிகலின் ‘The Government AI 100’ பட்டியலில் பெயர் இடம்பெறுவது மரியாதைக்குரியது ஆகும். ஆனால் இது அனைத்து மலேசியர்களுக்கும் நன்மை தரும் வகையில் மலேசியாவின் இலக்கவியல் மாற்றத்தை விரைவுபடுத்த ஒன்றிணைந்துள்ள அமைச்சு மற்றும் அதன் நிறுவனங்களில் உள்ள அனைவரின் கடுமையான உழைப்புக்குக் கிட்டியிருக்கும் அங்கீகாரம் ஆகும்” என்று கோபிந்த் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ள மலேசிய இலக்கவியல் அமைச்சுக்கு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு துறையில் நாட்டிற்கான வலுவான இலக்கவியல் அடித்தளத்தை உருவாக்குவதற்காக இடைவிடாது உழைத்து வரும் அமைச்சின் அர்ப்பணிப்புமிக்க பொதுச்சேவைத் துறையினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கோபிந்த் சிங் பெருமிதத்தோடு கூறினார்.

“AI யுகத்தில்,  நாட்டு மக்களின் கனவுகளை கூட்டாக  முன்னெடுக்க இன்னும் பல பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது, ன்றாலும் நாங்கள் சரியான பாதையில் இருக்கிறோம் என்று நம்புகிறேன். நமது கவனம் தற்போது இலக்கவியல் மாற்றத்தை வலுப்படுத்துவதிலும்,முன்னேற்றுவதிலும் இருக்கிறது; இதன் வழி, செயற்கை நுண்ணறிவு, பொதுமக்கள், வணிகத் துறைகள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளில் துல்லியகவும், அளவிடக்கூடிய பயன்களையும் வழங்கும்—இது இறுதியாக நாடு முழுவதிற்குமான நன்மையை பெற்றுத்தரும்” என்றும் அவர் தெரிவித்தார்.

பட்டியலில் உள்ள 100 பேரில், அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் மைக்கேல் கிராட்சியோஸ்; கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மனித மையப்படுத்தப்பட்ட AI நிறுவனத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஃபீ-ஃபீ லி; சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) பொதுச் செயலாளர் டோரீன் போக்டன்-மார்ட்டின்; ஜெர்மனியின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்திக்கான மத்திய அமைச்சின் AI பிரிவின் தலைவர் எவ்லின் கிராஸ்; மற்றும் சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாக இயக்குநர் ஜுவாங் ரோங்வென் ஆகியோர் அடங்குவர்.

பரிந்துரைக்கப்பட்டவர்களின் ஆரம்ப பட்டியல், நேரடிப் பணியாய்வு ஆராய்ச்சி மற்றும் அபோலிட்டிகலின் கற்றல் கூட்டாளர்கள், மற்றும் 400,000 க்கும் மேற்பட்ட பொது ஊழியர்களைக் கொண்ட அபோலிட்டிகலின் பரந்த  சமூகத்தின் பரிந்துரைகள்  வழி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வேட்பாளரும், அவர்களின் பங்களிப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) ஆட்சியமைப்பு, செயல்படுத்தல் மற்றும் அந்தப் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளலின் மீது அவர்களின் செல்வாக்கு, மற்றும் ஒரு பொது ஊழியராக அவர்களின் நிலை ஆகிய அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் பெற்றனர். இறுதிப் பட்டியல் மூன்று வெளிப்புற AI நிபுணர்களால் சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அபொலிட்டிகல் என்பது 2015 ஆம் ஆண்டில் அரசுகள் சிறந்த முறையில் செயல்பட உதவுவதற்காக நிறுவப்பட்ட ஒரு உலகளாவிய தளம் ஆகும். இது பொது ஊழியர்களுக்கு கற்றலும், சிறந்த நடைமுறைகளை பகிரலும், பொதுவான சவால்களை தீர்க்கவும் உதவுவதன் மூலம் அவர்களை சக்திவாய்ந்தவர்களாக மாற்றுகிறது. இன்று, அபொலிட்டிகல் உலகில் அரசுகளுக்கான மிகப்பெரிய ஆன்லைன் சமூகமாக திகழ்கிறது; 170 நாடுகளில் 2,50,000 க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட பொது ஊழியர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் உலகளாவிய அளவில் பல கோடிகளுக்கு மேற்பட்ட பங்காளர்களுக்கு,  இதனை விரிவாக்கம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here