நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு, கோடை காலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர். இதனால், சுற்றுலா வருவோரின் வருகையை முறைப்படுத்தும் நோக்கில், அவர்களின் விபரங்கள், வருகை, புறப்பாடு, வாகன எண், தங்குமிடம் உள்ளிட்டவற்றை அடையாளப்படுத்தி, இ பாஸ் நடைமுறையை கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இன்று முதல் epass.tnega.org என்ற இணைய முகவரியில் இ பாஸ் விண்ணப்பிக்கும் நடைமுறையை சுற்றுலா பயணியர் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த நடைமுறை 7ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இ பாஸ் விண்ணப்பிக்க உள்நாட்டு பயணியர் தங்கள் மொபைல் போன் எண்ணை பயன்படுத்தலாம். வெளிநாட்டு பயணியர் தங்கள் மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையால் சுற்றுலா பயணியருக்கோ, வணிக ரீதியாக வந்து செல்வோருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது.