ஜூருவில் RM211,650 மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் – 56 வயது நபர் கைது!

ஜூரு:

பினாங்கு முதலாம் மண்டலக் கடல்சார் போலீசார், ஜூரு R&R பகுதியில் நடத்திய சோதனையில் ஒரு பெரிய அளவிலான சட்டவிரோத பட்டாசு விநியோகக் கும்பலின் முயற்சியை முறியடித்துள்ளனர்.

சரியான உரிமம் இன்றி பட்டாசுகள் விநியோகம் செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய செபராங் பிறை மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் (D9 unit) இணைந்து கடல்சார் போலீசார் இந்தச் சோதனையை மேற்கொண்டனர் என்று, கடல்சார் போலீஸ் கமாண்டர் சூப்பரின்டெண்டன் ஃபக்ருதீன் அம்ரி சனுசி கூறினார்.

R&R பகுதியில் இருந் லோரியில் சோதனையிட்டபோது, பல்வேறு வகைகளைச் சேர்ந்த 206 பெட்டி பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு RM131,650 ஆகும்.

இதனைத் தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 டன் எடையுள்ள லோரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு RM80,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு RM211,650 ஆகும்.

மேலும் லோரியை ஓட்டி வந்த 56 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெடிபொருட்களைச் சேமித்து வைக்கவோ அல்லது வைத்திருக்கவோ அவரிடம் முறையான உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு 1957-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் (Explosives Act 1957) பிரிவு 8-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here