இந்தியா – மாலத்தீவுகள் மோதல் : 6 மாதங்களாக கல்லா கட்டும் இலங்கை

இந்தியா – மாலத்தீவுகள் இடையிலான மோதலை பயன்படுத்தி, சுற்றுலாத் துறையில் கடந்த 6 மாதங்களாக கல்லா கட்டி வருகிறது இலங்கை. மாலத்தீவுகளின் பொருளாதாரம் சுற்றுலாவை அடிப்படையாக கொண்டது. பல ஆண்டுகளாக இந்தியர்கள் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று வரும்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் 2.9 லட்சம் இந்தியர்களும், 2022ஆம் ஆண்டில் 2.4 லட்சம் இந்தியர்களும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அதாவது, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளில் சுமார் 23% பேர் இந்தியர்கள்தான். அந்த அளவுக்கு மாலத்தீவுகளுக்கு சுற்றுலா மூலம் இந்தியா மிகப்பெரிய அளவுக்கு பொருளாதாரத்தை கொடுத்து வந்தநிலையில், இந்தியா – மாலத்தீவுகள் இடையிலான மோதலால், இந்திய சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதை குறைத்துவிட்டனர்.

மாலத்தீவை இந்தியர்கள் புறக்கணித்ததால், அண்டை நாடான இலங்கைக்கு மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளது. அதாவது, இந்திய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கைக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். அத்துடன் இலங்கையில் அதிகளவில் பணத்தையும் செலவு செய்வதால், 2022ஆம் ஆண்டை விட, 2023ஆம் ஆண்டில் சுற்றுலா சென்ற பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு 1.23 லட்சம் இந்தியர்கள் சென்று வந்தநிலையில், 2023ஆம் ஆண்டில் 3 லட்சம் பேர் சென்று வந்துள்ளனர். இதனால், நடப்பாண்டில் சுமார் 6 லட்சம் இந்தியர்கள் தங்களது நாட்டிற்கு சுற்றுலா வருவார்கள் என்று இலங்கை சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியா – மாலத்தீவுகள் விவகாரத்தால் தங்களது நாடு மிகப்பெரும் பலன் அடைந்துள்ளதாக கூறும் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இதனால், தங்களது நாடு பொருளாதார அளவிலும் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here