புதுடெல்லி: உள்துறை அமைச்சின் ஒரு பிரிவான இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகளின் பகுப்பாய்வு, சராசரியாக 7,000 இணையக் குற்றம் தொடர்பான புகார்கள் தேசிய இணையக் குற்றப் புகார் தளத்தில் (NCRP) அன்றாடம் பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான மோசடிகள் கம்போடியா, மியன்மார், லாவோஸ் ஆகிய மூன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து நடத்தப்படுவதாக அது குறிப்பிட்டது. குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்படும் பல இணையப் பயன்பாடுகள் மாண்டரின் மொழியில் எழுதப்பட்டுள்ளதால், இதில் சீனாவின் தொடர்பை நிராகரிக்க முடியாது என்று இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார் புதன்கிழமை (மே 23) தெரிவித்தார்.
இந்தியாவைக் குறிவைக்கும் இணையக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளன. அவற்றில் 45% தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் இருந்து, முக்கியமாக கம்போடியா, மியன்மார், லாவோஸ் நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் கூறினார். அந்தத் தரவின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை 7.4 லட்சம் புகார்கள் வந்துள்ளன.





















