ஜோகூர் பாரு:
கூலாய் மற்றும் பத்து பஹாட் ஆகிய மாவட்டங்களில் குடிநுழைவு துறை நடாத்திய இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில், எட்டு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய (மே 23) நடவடிக்கையின் போது உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் சோதனை செய்யப்பட்டதாக ஜோகூர் குடிவரவுத் துறையின் இடைக்கால இயக்குநர் முகமட் பைசல் ஷம்சுடின் தெரிவித்தார்.
கூலாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சுமார் 249 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 106 கள்ளக்குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் 20 முதல் 48 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர் சொன்னார்.
அதேநேரம் பத்து பகாட்டில் உள்ள ஒரு கூரியர் மையத்தில் நடந்த சோதனையில், 19 வயது முதல் 52 வயதுடைய மொத்தம் 124 வெளிநாட்டினர் இரண்டு உள்ளூர்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
இரண்டு சோதனைகளிலும் கைது செய்யப்பட்டவர்கள் மியன்மார், பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா, பங்களாதேஷ், நேபாளம், சீனா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத காரணத்திற்காக குடிவரவு சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c), அதே சட்டத்தின் பிரிவு 15(1)(c) அதிகமாக தங்கியதற்காக மற்றும் குடியேற்றத்தின் பிரிவு 39(b), 1963 சமூக வருகை அனுமதிகளை தவறாக பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் ஆகியவற்றின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.