கூச்சிங்:
நாடு முழுவதும் உள்ள பகுதி நேர ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 1 முதல் ஒரு வருடத்திற்கு சமூக பாதுகாப்பு அமைப்பின் (Perkeso) பங்களிப்பைப் பெறுவார்கள் என்று தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்த பங்களிப்பை மலேசிய தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா) மூலம் தொடர்புத் துறை அமைச்சகம் முழுமையாக வழங்கும் என்று அவர் சொன்னார்.
அதன்படி, அனைத்து பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்களையும் தொடர்புத் துறை அமைச்சகம் மூலம் உதவிகளை எளிதாக்குவதற்கு தங்களின் தரவுகளை புதுப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
“தகவல் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில், 565 பதிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பகுதிநேர பணியில் உள்ளனர், அவர்களில் 538 பேர் Perkeso பங்களிப்புகள் பெற தகுதியானவர்களாக இருந்தும், அவர்கள் இதுவரை Perkesoவில் பதிவு செய்யவில்லை என்பதை Perkeso உறுதிப்படுத்தியது,” என்று, நேற்றைய ஹவானா தேசிய பத்திரிகையாளர்கள் தினம் 2024 இல் அவர் தனது வரவேற்பு உரையில் கூறினார்.
மேலும் ஊடகங்கள் மற்றும் அதன் பணியாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படும் மலேசிய ஊடக மன்றத்தை நிறுவுவதற்கான இறுதிக்கட்டத்தில் தொடர்புத்துறை அமைச்சகம் தற்போது உள்ளதாகவும், இந்த மசோதா இவ்வாண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் சொன்னார்.




















