சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்படும் ‛அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்தது. சிறிய ரக ராக்கெட்டுகளை தனியார் பயன்பாட்டுக்கு ஏவுவதற்காக அந்நிறுவனம் அதை அமைத்தது. அந்த வகையில், ‛அக்னிபான் சார்டெட்’ என்ற ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்தது.
300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அந்த ராக்கெட் 700 கி.மீ., தொலைவு வரை செல்லக்கூடியது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், செமி கிரையோஜெனிக் மூலம் இந்த ராக்கெட் இன்று (மே 30) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.