கோலாலம்பூர்:
சிலாங்கூரிலுள்ள ஒரு பள்ளியில் 11 வயது சிறுவனை அவரது ஆசிரியர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு கடுமையான வெயிலில் நிற்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அச்சிறுவன் வெப்பத்தாக்குதலுக்கு உள்ளானதில் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட நேரமாக கடுமையான வெயிலில் நின்ற காரணத்தினால் அச்சிறுவனுக்கு நரம்பு தொடர்பான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்பாங் மருத்துவமனை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவரை இனி உடற்குறையுள்ளவராக வகைப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்த மருத்துவமனை கடிதம் தந்திருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் 35 வயதான ஏ.டி. மோகன செல்வி கூறினார்.

தமது மகனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக நேற்று (மே 29) நடைபெற்ற ஓர் செய்தியாளர் கூட்டத்தில் மோகன செல்வி கூறினார்.
முன்பு தமது சகோதரர்களுடன் சேர்ந்து விளையாடிய தமது மகன், தற்போது மற்றவர்களிடமிருந்து ஒளிந்து தமக்குத் தாமே பேசிக்கொள்வதாக அவர் கூறினார்.
“உடல்நிலை பிரச்சினை காரணமாக எனது மகனை இனி வழக்கமான பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று மருத்துவமனை தெரிவித்துவிட்டது. மாறாக அவர் சிறப்புத் தேவைகள் கொண்ட சிறாருக்கான பள்ளிக்கு அவரை அனுப்ப வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று தமது மனக் குமுறலை வெளிப்படுத்தினார் தாயார் மோகன செல்வி.
செய்தியாளர் கூட்டத்தில் மோகன செல்வியுடன் அவரது கணவரான 40 வயது பி. சுரேஷ், அவர்களது வழக்கறிஞர் திரு தினேஷ், மலேசியா-சிங்கப்பூர் ஊழியர் பணிக்குழுத் தலைவர் எஸ். தயாளன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக, சிறுவனுக்குப் பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்த அனைவருக்கும் எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று வழக்கறிஞர் தினேஷ் கூறினார்.
“இந்த விவகாரம் சிறுவனின் குடும்பத்துக்குக் கடும் மனவுளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறுவனின் தாயார் மோகன செல்வி அதிகம் பாதிக்கபட்டுள்ளார். அவர் தற்போது மூன்று மாதக் கர்ப்பிணி,” என்றார் அவர்.



















