வடமேற்கு மாநிலங்களில் ஏற்படும் வரலாறு காணாத அதிக வெப்பநிலை புழுதிப் புயல்களைத் தூண்டி, மழையின் தீவிரத்தைக் குறைக்கலாம். அடுத்த மூன்று நாட்களில் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 31 முதல் ஜூன் 3 வரை கிழக்கு ராஜஸ்தானிலும், மே 31 முதல் ஜூன் 1 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்திலும், ஜூன் 1, 2 ஆம் தேதி மேற்கு ராஜஸ்தானிலும் புழுதிப் புயல் வீசக்கூடும்.
வடக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் அதிகரித்துவரும் வெப்பநிலை, புழுதிப் புயல்கள் உருவாவதை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, வாணலி போன்று மாறியுள்ளது. சுரு மற்றும் பலோடி போன்ற இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. மற்ற இடங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.



















