2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை அடைவதற்கு இம்மாதம் கலந்துகொள்ளவிருக்கும் இரண்டு போட்டிகளிலும் 400 மீட்டர் பிரிவுக்கான தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை ஷெரின் சம்சன் வல்லபாய் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி சாதனை புரிய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கு 50.95 விநாடிகள் தகுதி வரம்பின் வாயிலாக இடம்பெறுவது மிகவும் கடினமான நிலையில் 26 வயதான ஷெரின் இம்மாத இறுதிக்குள் தர வரிசையில் முதல் 48 இடங்களுள் ஒன்றைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
நேற்று முன்தினம் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் ஷெரின் 2ஆம் இடத்தைப் பிடித்தார். அப்போட்டியில் அவர் 400 மீட்டர் தூரத்தை 57.79 விநாடிகளில் கடந்து தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்தார்.
இதனையடுத்து உலகத் தர வரிசையில் 77ஆவது இடத்தில் உள்ள அவர் 66ஆவது இடத்திற்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை குவாந்தானில் நடைபெறும் மலேசிய பொது ஓட்டப் போட்டியும் இம்மாதம் 23, 24ஆம் தேதிகளில் நடைபெறும் கஸகஸ்தான் போட்டியும் ஷெரினுக்கு மிக முக்கியமானவை என மலேசிய ஓட்டப்பந்தய தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் ரோபர்ட் ஜே பல்லார்ட் தெரிவித்தார்.
இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெறுவதோடு சாதனை புரிய வேண்டிய கட்டாயத்தில் ஷெரின் உள்ளார். அப்போதுதான் அவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
ஒருவேளை 50.95 விநாடிகள் நேர வரம்பை அவர் பூர்த்தி செய்தால் வழக்க நிலையில் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு பெறுவார் எனவும் ரோபர்ட் கூறினார்.








