2023 எஸ்பிஎம் பரீட்சை: 10,160 மாணவர்கள் எழுதவில்லையா? என்ன செய்யப் போகிறது கல்வி அமைச்சு?

பி.ஆர். ராஜன்

2023 எஸ்.பி.எம். பரீட்சைக்கு 383,685 மாணவர்கள் அமர்ந்தனர். அதேசமயத்தில் மொத்தம் 10,160 மாணவர்கள் அப்பரீட்சைக்கு அமரவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் பரீட்சைக்கு அமராததற்கு ஏன் என்பதற்கான காரணத்தின் ஆணிவேரை கல்வி அமைச்சு கண்டறிய வேண்டும். இந்நிலை நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதோடு பலவீனங்களைக் காட்டுவதாகவும் உள்ளது.

எஸ்.பி.எம். பரீட்சைக்கு தங்களது பிள்ளைகளை அனுப்பி வைக்காத பெற்றோரை என்னவென்று சொல்வது?  கல்வியில் கூடவா அலட்சியம் காட்டவேண்டும். பெற்றோர் என்ற முறையில் தங்களது கடமைகளை நிறைவாக செய்திருந்தால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பிள்ளைகள் பரீட்சைக்கு அமராமல் இருந்திருப்பார்களா?

ஆசிரியர்களையும் கல்வி அமைச்சையும் மட்டும் இவ்விவகாரத்தில் நாம் குற்றங்குறை சொல்லிவிட முடியாது.  பெற்றோருக்கும் இதில் மிகப் பெரிய பங்களிப்பு இருக்கிறது. எஸ்.பி.எம். தேர்வு என்பது அரசாங்கப் பரீட்சையில் மிகவும் உயர்வானதாகும்.

அடுத்த கட்டமாக கல்லூரி, பல்கலைக்கழகம், மெட்ரிகுலேஷன் என உயர்கல்வியை நோக்கி அவர்கள் தடம் பதிக்க வேண்டியிருக்கிறது.  இதற்கான தகுதியை நிர்ணயிப்பதாக எஸ்.பி.எம். தேர்வு அமைகிறது.  பெற்றோரின் அலட்சியம் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் கிட்டத்தட்ட 11 ஆண்டு கல்வியின் நிறைவாக எஸ்.பி.எம். தேர்வு ஒவ்வொரு மாணவருக்கும் அமைகிறது.  தங்களுடைய அடுத்தக் கட்ட உயர்வுக்கு எஸ்.பி.எம். தேர்வு எத்தகைய வல்லமைமிக்கது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கல்வியில் விளையாட்டாக இருப்பதற்கு அது ஒன்றும் விளையாட்டு மைதானமல்ல.

கல்வி அமைச்சு எஸ்.பி.எம். வரை கிட்டத்தட்ட இலவச கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறது.  தேவையான பயிற்சிப் புத்தகங்களையும் உபகரணங்களையும் கல்வி அமைச்சு வழங்குகின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எஸ்.பி.எம். தேர்வை நிறைவு செய்யத் தவறும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு என்ன தண்டனை வழங்கப் போகிறது.

ஒவ்வொரு மாணவரும் எஸ்.பி.எம். வரை படித்துத் தேறவேண்டும் என்பதை கல்வி அமைச்சு கட்டாயமாக்கவேண்டும். பரீட்சை எழுதத் தவறும் மாணவருக்குத் தண்டனை வழங்குவது குறித்தும் கல்வி அமைச்சு பரிசீலிக்கவேண்டும்.

கல்வி என்பது ஒரு வரம் என்பதை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து படிக்க வேண்டும். இன்றைய நிலையில் திவெட் எனப்படும் தொழில்நுட்பம், தொழில்கல்வி, பயிற்சி, கற்கவேண்டும் என்றாலும் அதற்குக் குறைந்தபட்சத் தகுதியாக எஸ்.பி.எம். அமைந்திருக்கிறது.

மாணவர்களைப் பொறுத்தவரை ஆரம்பப் பள்ளியில் யூபிஎஸ்ஆர், இடைநிலைப்பள்ளியில் பிடி3 பரீட்சை நீக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்.பி.எம். மட்டுமே உயர்நிலைப் பரீட்சையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கல்வியில் யாரும் பின்தங்கிவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலிருந்து கல்வி அமைச்சு விலகி விடக்கூடாது. பெற்றோரும் இந்த நிலையை உறுதி செய்வதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும். மேலும், பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலையும் முற்றாக கலையப்பட வேண்டும்.  ஒவ்வொரு மாணவரும் எஸ்.பி.எம். வரை கல்வி கற்பதை அரசாங்கம் குறிப்பாக கல்வி அமைச்சு கட்டாயமாக்க வேண்டும். இதனை உறுதி செய்வதற்கு மாணவர்களின் பள்ளி வருகை ஒவ்வொரு நாளும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here