சீன ‘#மீடூ’ இயக்க ஆர்வலருக்குச் சிறைத்தண்டனை

பெய்ஜிங்:

சீனாவில் ‘#மீடூ’ இயக்க ஆர்வலரான ஹுவாங் சுசினுக்கு ஜூன் 14ஆம் தேதி ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தைக் கீழறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று நாட்டின் தென்பகுதியில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

35 வயதாகும் ஹுவாங், தன்னார்வச் செய்தியாளராகப் பணிபுரிகிறார். தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யத் திட்டமிடுவதாக ஆதரவாளர்கள் கூறினர்.

ஹுவாங்குடன் விசாரிக்கப்பட்ட தொழிற்சங்க ஆர்வலரான 40 வயது வாங் ஜியான்பிங்கிற்கு மூன்று ஆண்டுகள் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்வாரா என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை.

ஹுவாங் சுசின், வாங் ஜியான்பிங் இருவரையும் விடுவிக்கக் கோரும் பிரசார இயக்கத்தின் பேச்சாளர், எதிர்பார்த்ததைவிடக் கூடுதலான காலத்துக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பாதுகாப்புக் கருதி அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

“இவ்வளவு கடுமையான தண்டனை விதிக்கத் தேவையில்லை. எனவே மேல்முறையீடு செய்ய விரும்பும் ஹுவாங்கின் முடிவை ஆதரிக்கிறோம்,” என்றார் அவர்.

ஹுவாங், வாங் இருவரையும் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சீன அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர். 2023ல் இருவரும் விசாரிக்கப்பட்டனர்.

ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here