நமது நிருபர்:எல்.கே. ராஜ்
கோலாலம்பூர்,
2026 மலேசிய வருகை ஆண்டை (VM2026) முன்னிட்டு சந்தை வியூகங்களைச் செம்மைப்படுத்தும் முயற்சியாக சுற்றுலாத்துறை சார்ந்த துறைகளோடு டூரிசம் மலேசியா (Tourism Malaysia) ஒரு முக்கிய வர்த்தகச் சந்திப்பை நேற்று நடத்தியது.
பிஸ்னஸ் டூ பிஸ்னஸ் (B2B) எனும் அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் பயணத் தொழில்துறை, பயண ஏஜெண்டுகள், ஹோட்டல் உரிமையாளர்கள், விமான நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் VM2026 நெட்வொர்க்கின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தச் சந்திப்புக் கூடத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், முன்னெடுப்புகள், வியூகத் திட்டங்கள் ஆகியவற்றைச் செம்மைப்படுத்தும் நோக்கத்தில் நேற்றைய இந்தச் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள டூரிசம் மலேசியா (Tourism Malaysia) அலுவலகங் களுக்கான வியூகங்களும் அவற்றை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்குரிய வழிவகைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் சுற்றுலாத்துறை சார்ந்த பல்வேறு தொழில்துறைகளைப் பிரதிநிதித்து 80க்கும் அதிகமான உள்நாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
டூரிசம் மலேசியா (Tourism Malaysia) வெளிநாடுகளில் 30 அலுவலகங்களைக் கொண்டிருக்கிறது. அதேசமயத்தில் உலகம் முழுவதும் நான்கு சந்தைப் பிரதி நிதிகளையும் கொண்டிருக்கிறது. இந்தச் சந்திப்பின்போது இவற்றோடு இணையும் வாய்ப்பையும் அவர்கள் பெற்றனர்.
2026 மலேசிய வருகை ஆண்டின் நோக்கங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகள், திட்டங்கள், வெளிநாடுகளில் அவற்றை விளம்பரம் செய்வது போன்றவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட அனைவரும் ஆக்கப்பூர்வமான முன்னோட்டங்களையும் ஆதரவையும் தெரிவித்தனர். உலகளாவிய சுற்றுலாத்துறை புத்தெழுச்சி பெற்று வரும் நிலையில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை தருவதற்குரிய அனைத்து முக்கிய அம்சங்களையும் விவாதிக்கும் ஒரு களமாக இந்தச் சந்திப்பு விளங்கியது.
மலேசிய சுற்றுலாத்துறையின் இலக்கை நனவாக்கும் வகையில் வெளி நாடுகளில உள்ள சுற்றுலாத்துறை இயக்குநர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்பிலும் அதீத கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாத்துறை சார்ந்தவர் களோடு சந்திப்புகளை நடத்துவது, புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வது, வகுக்கப்பட்ட இலக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்வதற்கு சுற்றுலாத்துறையின் நடப்புப் போக்கை அனுசரித்து முயற்சிகளைப் பன்மடங்காக்குவது குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
2026 மலேசிய வருகை ஆண்டு 35.6 மில்லியன் சுற்றுப்பயணிகளைக் கவர்வதோடு இதன்மூலம் 147.1 பில்லியன் ரிங்கிட் வருமானத்தைப் பெற வேண்டும் என்ற இலக்கை நனவாக்குவதில் தனக்குள்ள கடப்பாட்டை டூரிசம் மலேசியா (Tourism Malaysia) மறு உறுதிப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலா, கலை, கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் VM2026 என்பது வெறும் பிரச்சார இயக்கம் மட்டுமல்ல. ஆனால் அதன் இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு தனிநபரின் அர்ப்பணிப்பும் ஆதரவும் கூட்டு முயற்சிகளும் தேவை என்பதை வலியுறுத்தினார்.
நம்முடைய வியூகங்களை ஒன்றிணைந்து மறு ஆய்வு செய்வோம். சந்தை நடவடிக்கைத் திட்டங்களில் புதிய வியூகங்களைக் கொண்டிருப்போம். வெற்றிக்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் முன்னெடுப்போம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதன்மூலம் மலேசியாவின் அதிசயங்களை அனுபவப்பூர்வமாகக் கண்டு ரசிப்பதற்கு உலகளாவிய சுற்றுப்பயணிகளை மலேசியாவுக்குக் கொண்டு வரும் நம்முடைய பிரச்சார வியூகங்கள் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் குறிப்பிட்டார்.
VM2026 மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் வகையில் இதற்கு துறை சார்ந்த அனைவரும் வலுவான ஒத்துழைப்பை வழங்குவோம் என்ற உறுதிமொழியுடன் இந்தச் சந்திப்பு ஒரு நிறைவைப் பெற்றது.
2024ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை 7.56 மில்லியன் பேர் மலேசியாவுக்கு வருகை தந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது 2023 இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 27.5 விழுக்காடு அதிகமாகும். 2023இல் இதே காலகட்டத்தில் 5.9 மில்லியன் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்தனர்.
சுற்றுப்பயணிகளுள் சிங்கப்பூரியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். 25 லட்சத்து 99 ஆயிரத்து 76 பேர் என சிங்கப்பூரியர்களின் வருகை பதிவானது. 11 லட்சத்து 50 ஆயிரத்து 939 பேருடன் இந்தோனேசியா 2ஆவது இடத்தில் உள்ளது. சீனாவில் இருந்து 9 லட்சத்து 55 ஆயிரத்து 696 பேரும் தாய்லாந்தில் இருந்து 5 லட்சத்து 43 ஆயிரத்து 768 பேரும் புரூணையில் இருந்து 3 லட்சத்து 90 ஆயிரத்து 481 பேரும் மலேசியாவிற்கு இக்காலகட்டத்தில் வருகை புரிந்தனர். 



















