கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு… சிபிஐ விசாரணை தான் தீர்வு என அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை தான் தீர்வு என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 56 பேர் இதுவரை உயிரிழந்திருக்கும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக முக்கிய குற்றவாளிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை போதாது எனவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியின் போது, ”விஷச்சாராயத்தால் 56 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து கூறாதது ஏன்? ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே இதுவரை கருத்து கூறாதது ஏன்? சட்டபூர்வமாக மதுபானம் விற்கப்படும் தமிழகத்தில் எப்படி கள்ளச்சாராய விற்பனை நடைபெறும்? தமிழகத்தில மதுபானம் தாராளமாக கிடைக்கிறது. 1971ம் ஆண்டு தமிழகத்தில் மதுவை திமுக தான் அறிமுகப்படுத்தியது.” என்றார்.

மேலும், “ கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விவாதத்திற்கு அரசு அனுமதிக்கவில்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காய்ச்சுவோருக்கும், ஆளும் கட்சிக்கும் தொடர்பு உள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவிற்கு தொடர்பு உள்ளதால், முறையாக விசாரணை நடைபெறாது. எனவே கட்டாயமாக சிபிஐ விசாரணை தேவை.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here