மெட்ரிகுலேஷன் உயர்கல்வி வாய்ப்பு இவ்வாண்டு மீண்டும் மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எஸ்பிஎம் பரீட்சையில உயர்புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் இதயங்கள் நொறுங்கத் தொடங்கியிருக்கின்றன.
நாட்டின் 17 அரசாங்க மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கு விண்ணப்பம் செய்த உயர்புள்ளிகளைப் பெற்ற பல மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
மனம் உடைந்த நிலையில் ஏன் இவ்வளவு சிரமப்பட்டுப் படித்தோம் என்ற மன உளைச்சல் மாணவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. எரிச்சலின் உச்சத்தில் மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்கள் குறிப்பாக, இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இடம் பெற்றுத் தருமாறு இந்திய மக்கள் பிரதிநிதிகளிடம் மன்றாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் மெட்ரிகுலேஷன் விவகாரம் ஒரு மிகப் பெரிய தலைவலியாகவே நீடித்து வருகிறது. அதிலும் இந்திய மாணவர்கள் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 12 மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், மாரா நடத்தும் 2 கல்லூரிகள், கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 3 இன்ஜினியரிங் கல்லூரிகள் என மொத்தம் 17 மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால், உயர்கல்வியைப் பொறுத்தவரையில் அவர்களின் பிள்ளைகள் 2ஆம் தரமாகவே நடத்தப்படுகின்றனர்.
உயரிய அடைவு நிலையையும் புள்ளிகளையும் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஒரு பாவச் செயலாகும். தோலின் நிறம் பார்த்து வாய்ப்புகள் வழங்கப்படுவது மகா பாவமாகும்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் 40 ஆயிரம் இடங்களைக் கொண்டிருக்கின்றன. 2019ஆம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.
இந்த எண்ணிக்கையில் 90 விழுக்காடு பூமிபுத்ரா மாணவர்களுக்கும் எஞ்சிய 10 விழுக்காடு பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கும் (சபா, சரவாக் உட்பட) ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாராவின் 2 கல்லூரிகளிலும் 100 விழுக்காடு பூமிபுத்ரா மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது எழுதப்படாத ஒரு கொள்கையாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன அடிப்படையில் இந்தக் கல்லூரிகளில் வாய்ப்புகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். கல்வி என்பது அனைத்து இனப் பிள்ளைகளுக்கும் சமச்சீரானது என்ற கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.

11 ஏ பெற்ற இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால், அதேசமயத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஏ பெற்ற சகோதர இன மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்படுவதை எவ்வாறு அரசாங்கம் நியாயப்படுத்தும்?
மலேசிய இந்திய மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 2ஆயிரம் இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் இக்குரல் கேட்கவே மாட்டேன் என்கிறது.
கடந்த பொதுத்தேர்தல் கொள்கை அறிக்கையில் அளிக்கப்பட்ட உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பான வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். மடானி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதி செய்ய வேண்டும்.
மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்புக்கு கிட்டத்தட்ட 8 ஆயிரம் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் தகுதி பெறுகின்றனர். ஆனால், ஆயிரத்திற்கும் சற்று அதிகமானவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலும், இன ரீதியாக ஒதுக்கப்படும் இடங்கள் பற்றிய தரவுகளும் வழங்கப்படுவதில்லை. கேட்டாலும் தருவதும் இல்லை.
தன்னைவிட மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் சகோதர இன மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது மிகப் பெரிய வேதனையாக உள்ளது என்று தகுதி பெற்ற இந்திய மாணவர்கள் கண்ணீர் வடிப்பது கண்டு சமுதாயத்தின் இதயங்களில் ரத்தம் கொட்டுகிறது.
உயர்கல்விக்காக ஒவ்வோர் ஆண்டும் இந்திய சமுதாய மாணவர்கள் மண்டியிட்டு கண்ணீர் சிந்த வேண்டுமா? மன்றாட வேண்டுமா? மடானி அரசாங்கம் முடிவு செய்யட்டும்.





















