லக்னோ:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா விழா நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தலைநகர் லக்னோவில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அதில், பக்தர்களின் பாதுகாப்பு, கூட்டக் கட்டுப்பாடு, வசதிகள், தங்குமிடங்கள் குறித்து பேசப்பட்டது.
அதிக அளவில் வரும் பக்தர்களை கட்டுப்படுத்துவது சவாலான பணியாக இருக்கும். எனவே, இந்தப் பணிகளுக்கு காவல்துறையினர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
பக்தர்கள் வசதிக்காக பிரயாக் ராஜ் பகுதியில் 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. மேலும் விழாவின்போது 10,000 துப்புரவுத் துறை ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர்.
இந்துக்களின் பாரம்பரிய புனித நீராடும் நிகழ்வாக கொண்டாடப்படும் இந்த விழா ஹரித்துவார், அலகாபாத், நாசிக், கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.
இந்த விழாவில் இந்தியாவெங்கிருந்தும், உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
உலகின் மிக அதிக அளவிலான மக்கள் கூடும் மிகப் பெரிய விழாக்களில் ஒன்றான கும்பமேளாவுக்கு, மனிதகுலத்தின் கலாசாரா பாரம்பரிய நிகழ்வு கும்பமேளா என யுனெஸ்கோ அங்கீகாரம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.