புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் அண்மையில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஜம்முவில் கடுவா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஐந்து வீரர்கள் பலியான ஒரு வாரத்திற்குள் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் 40 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 400 முதல் 500 வரையிலான சிறப்பு படை வீரர்களும் ஒரு வாரத்திற்கு முன்பு ஜம்மு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். கூடுதல் ராணுவ வீரர்களுடன் ஜம்மு பகுதியில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக்கப்படும் என்றும் இதே பகுதியில் மத்திய ஆயுத காவல் படையினர் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
























