தி. மோகன்
கோலாலம்பூர்:
மலேசியாவில் மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறை இன்னும் உயர்நிலைக்கு உருமாற்றம் கண்டிருப்பதாக தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுக் கழகத்துறை அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் கருத்துரைத்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மைக்ரோ அளவிலான தொழில்துறைகளின் எண்ணிக்கை 923,667ஆக இருந்தது. அந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு 16.9 விழுக்காடு குறைந்து 767,421ஆக உறுதிப்படுத்தப்பட்டது.

அதேபோல் சிறிய அளவிலான தொழில்துறைகளின் எண்ணிக்கையும் 25.8 விழுக்காடு உயர்ந்துள்ளது. நடுத்தர தொழில்துறையின் எண்ணிக்கை 7.9 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.
மலேசியாவில் மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறை இன்னும் உயர்நிலைக்கு உருமாறுவதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு என்று இந்தத் தொழில்துறையின் அடைவு நிலை அறிமுக நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் கடந்த ஆண்டு மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறை 5.0 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு தேசியப் பொருளாதாரத்திற்கு இந்தத் தொழில்துறைகள் 613.1 பில்லியன் ரிங்கிட் பங்களிப்பை வழங்கியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் கடந்த ஆண்டு பொருளாதாரத் துறைகள் குறிப்பாக போக்குவரத்து உள்ளிட்ட சேவைத்துறைகளும் இணை வர்த்தகத் துறைகளான மொத்த – சில்லறை விற்பனைத் தரப்பும் சம்பந்தப்பட்ட சுற்றுலாத்துறை மீட்சி கண்டதால் பயன்களை அடைந்துள்ளன.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் சீனா அனைத்துலக எல்லையைத் திறந்தது இதற்கு முக்கியக் காரணம் என்றார் அவர். 2025 வரவு செலவுத் திட்டத்திலும் மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு இன்னும் அதிகமான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
2023ஆம் ஆண்டு இந்த தொழில்துறைகளுக்கு 40 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதேசமயம் இவ்வாண்டு 44 பில்லியன் ரிங்கிட் தரப்பட்டது. எனவே அடுத்தாண்டு இத்தொகை அதிகரிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என இவோன் பெனடிக் கூறினார்.




















