கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: 17 பேர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கர்ப்பிணிப் பெண்ணை நிர்வாணமாக்கி தெருவில் நடக்கவைத்த குற்றத்துக்கு அவரது கணவர் உள்பட 17 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் நிக்லகோட்டா கிராமத்தில் 2023 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஏழுமாத கர்ப்பிணிப் பெண்ணாக இருந்த அந்த 20 வயது மாதை அவர்கள் தெருவில் நிர்வாணமாக நடக்கவைத்து துன்புறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை வேறொரு ஆடவருடன் உறவு வைத்திருந்ததாகவும் அவரது வீட்டில் காணப்பட்டதாகவும் கூறி, அவர்கள் அப்பெண்ணைத் துன்புறுத்தியுள்ளனர். அந்தப் பெண் பின்னர் அவரது தந்தை வீட்டில் விடப்பட்டார். பிறகு அவர் தனது தாயுடன் காவல்நிலையத்திற்கு சென்று தன்னைத் துன்புறுத்தியவர்கள் மீது புகார் அளித்தார்.

அந்தச் சம்பவம் தொடர்பான காணொளி செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பரவலானது. வழக்கை விசாரிக்க மாநில காவல்துறையால் ஐந்து பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணின் கணவர் உள்பட 14 ஆண்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

வழக்கில் தொடர்புடைய மூன்று பெண்களுக்கும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து தலைமை மாஜிஸ்திரேட் ராம்கன்யா சோனி சனிக்கிழமை தீர்ப்பளித்தார் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் மணீஷ் நகர் தெரிவித்தார்.

நாட்டில் பெண்கள் தெய்வங்களாக மதிக்கப்படுவதையும் பண்டைய வேதங்களில் பெண்கள் கௌரவிக்கப்படுவதையும் குறிப்பிட்ட அவர், ‘கலியுகத்தில்’ பெண்கள் மீதான வன்முறையும் அட்டூழியங்களும் தொடர்கின்றன என்றார்.

இது மிகக் கொடூரமான குற்றம். மணிப்பூரிலும் இதேபோன்ற கொடூரமான குற்றம் நடந்துள்ளது. இத்தகைய குற்றங்கள் பெண்களுக்கு உணர்ச்சிரீதியான காயங்களை ஏற்படுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம். அப்போதுதான் குற்றங்கள் குறையும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறினார்.

கடந்த ஆண்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக தெருவில் நடக்கவைக்கப்பட்டதை அவர் சுட்டினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ரூ.10 லட்சம் இழப்பீடு, அரசு வேலையை அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here