ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்… பிரதமர் மோடி அவசர ஆலோசனை

வங்கதேசத்தில் மாணவர்களின் கிளர்ச்சியும், புரட்சியும் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமைந்துள்ளது அண்டை நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வங்கதேசத்தில் கனன்று கொண்டிருந்த நெருப்பு எரிமலையாய் வெடித்துக் கிளம்பியுள்ளது. தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவிதிக இடஒதுக்கீடு அளிக்கும் அரசின் திட்டத்தை மாணவர்கள் கடுமையாக எதிர்த்ததால் அரசு திரும்பப் பெற்றது. அதை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடஒதுக்கீட்டை அமல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு மாணவர் போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு, போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முற்பட்டது. துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு, தடியடி என போலீசாரின் கரங்கள் நீண்டன. அரசின் அடக்குமுறை பெருகப் பெருக மாணவர் போராட்டத்தின் வீரியமும் அதிகரித்து. அதற்கு ஆசிரியர்களும் வழிகாட்டிகளாய் விளங்கினர்.

இதற்கிடையே, கீழமை நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் 93 சதவீதம், தகுதி அடிப்படையில்தான் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் போராட்டம் அடங்கவில்லை. பாகுபாட்டை எதிர்க்கும் ஒத்துழையாமை இயக்கம் என்ற பெயரில் கிளர்ச்சி வலுத்தது.

தலைநகர் டாக்காவை நோக்கி நாடெங்கிலும் முற்றுகைப் பயணத்தை மாணவர்கள் தொடங்கினர். அதைத் தடுக்க போலீசார் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஊரடங்கு உத்தரவு, இணையத்திற்கு தடை என போராட்டங்களை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். 2 மாதங்களில் பலியானோரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்தது.

இதுநாள் வரை பொறுமை காத்துவந்த ராணுவம், பதவி விலக ஷேக் ஹசீனாவுக்கு 45 நிமிடங்கள் கெடு விதித்தது. அதைத் தொடர்ந்து ராஜினாமா செய்த ஹசீனா, நாட்டை விட்ட வெளியேற ராணுவம் உதவியது. டாக்காவில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பின்னர், விமானப்படை விமானம் மூலம் இந்தியா சென்றது.

இந்நிலையில் டெல்லி இருந்து 1 மணி நேர பயணத் தொலைவில் உள்ள உத்தரப்பிரதேசத்தின் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் சி-130 ரக விமானத்தில் வந்திறங்கிய ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். பின்னர் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டார்.

இதனிடையே பிரதமர் மோடியை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் நிலவும் சூழலை எடுத்துரைத்தார். அதன் பின்னர் அமித் ஷா, ராஜ் நாத் சிங், நிர்மலா சீதாராமன், உளவுப்பிரிவு மற்றும் ரா அமைப்புகளில் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here