கிள்ளான்,
நிதி நெருக்கடியால் வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்வி கனவுகள் கலைந்து விடக்கூடாது.
அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும்பட்சத்தில் மிகச்சிறந்த கல்வியாளர்களாக அவர்கள் நாளை இந்நாட்டில் சாதனை படைப்பர் என்று சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் வான் சஹாநுரின் அமாட், கிளப் பெலாஜார் செமர்லாங் சிலாங்கூர் டான் கோலாலம்பூர் அமைப்பின் தோற்றுநர் மோர்னா ஆகிய இருவரும் தெரிவித்தனர்.உயர்கல்விக்குப் பிள்ளைகளை அனுப்பிவிட்டு நிதிச் சுமையால் அவர்களின் பெற்றோர் அல்லல்படுவது நமக்குப் புதிதல்ல. ஆனால் உரிய நேரத்தில் அவர்களுக்கு இந்த உதவியைச் செய்வதன் மூலம் அவர்களின் மனச்சுமையும் பணச்சுமையும் ஓரளவு குறையும் என்று தாங்கள் நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பெர்சத்து கோத்தா ராஜா தொகுதித் தலைவருமான வான் சஹாநுரின், மோர்னா ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோரைச் சந்தித்து குடும்ப நிலவரங்களைக் கேட்டறிந்தனர். திருமூர்த்தி எஸ்பிஎம் தேர்வில் 7ஏ பெற்ற நிலையில் ரஷிக்கா 8ஏ பெற்று தற்போது மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இணைந்திருக்கின்றனர்.இவர்கள் இருவரின் லட்சியமும் மருத்துவர் ஆவது ஆகும். திருமூர்த்தியின் தந்தை முரளி லோரி டிரைவராகப் பணியாற்றுகிறார்.
ரஷிக்காவின் தந்தை பகுதி நேர கிராப் ஓட்டுநராக வேலை செய்கிறார். இவர் முன்னதாக ஆர்டிஎம், ஆஸ்ட்ரோ ஆகிய ஒளிபரப்பு நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.நல்ல வருமானம் இருந்த நிலை யில் சொந்த வீடு, கார் வாங்கியதை அவர் இவர்களோடு பகிர்ந்து கொண் டார். சேமிப்பில் இருந்த கொஞ்சப் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து அதில் பெரும் இழப்பை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்ட ஜீவன், தற்போது ஒரு சுமாரான வருமானத்தில் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னார்.