எந்தப் பதவியும் நிரந்தரமில்லை – டத்தோ ஆனந்தன் பேச்சு

(கு.அன்பரசன்)

சுங்கைபட்டாணி ஆக.14- மஇகா இளைஞர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இதுநாள்வரை எந்த வித தடையும் இடையூறும் விதிக்காமல் முழு சுதந்திரமாக செயல்படுவதற்கு மஇகா கெடா மாநில தலைமைத்துவம் வாய்ப்புகளை நிறைவாக வழங்கி வந்துள்ளது.

பதவி என்பது யாருக்கும் நிரந்திரமில்லாதது.ஆதலால் கெடா மாநில மஇகாவில் தலைமைத்துவ மாற்றம் என்பது நிச்சயம் என்று டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன் கூறினார்.

இங்குள்ள “ஷாகியுஸ்” ஹோட்டலில் நடைபெற்ற கெடா மாநில மஇகா இளைஞர் பகுதியின் 30ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், கெடா மாநில மாநில மஇகா தலைமைத்துவம் மாற்றப்பட்டால் இளைஞர் பகுதிக்கு வழங்கப்பட்டு வரும் வாய்ப்புகளும் சுதந்திரமும் எந்த தடையும் இல்லாமல் தொடரும் என பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

தேசியத் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களுக்கும் மாநில மஇகா அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கும். அதேபோல் கெடா மாநில மஇகா இளைஞர்களும் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவதில் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாக இருக்க வேண்டும் என மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர் பேராளர்களை டத்தோ ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.

இதுவரை கெடா மாநில மஇகா தலைவராக பொறுப்பேற்றிருந்த டத்தோ ஆனந்தன், மஇகா புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதனிடையே ஶ்ரீ சத்யா ராவ் சுப்பிரமணியம் கெடா மாநில மஇகா இளைஞர் பிரிவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக பேசிய மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் அரவிந்த் கிருஷ்ணன்,அதிகமான இளைஞர்களை கட்சியில் சேர்த்து சமுதாய நடவடிக்கைகளில் பங்கு பெறச் செய்து இளைஞர் பிரிவை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தூரநோக்கு,அர்ப்பணிப்பு, செயல்திறன் ஆகிய பண்புகளை கொண்ட இளையத் தலைவர்களை உருவாக்க முறையான தலைமைத்துவப் பயிற்சிகளை நாம் அவசியம் வழங்க வேண்டும் என இளைஞர் களை அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here