ஓராண்டிற்குள் 1,000 பெண் விமானிகளைப் பணியமர்த்த இண்டிகோ இலக்கு

புதுடெல்லி: இந்தியாவின் ஆகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ இன்னும் ஓராண்டிற்குள் ஆயிரத்திற்கும் அதிகமான பெண் விமானிகளைக் கொண்டிருக்க இலக்கு கொண்டுள்ளது. இப்போதைக்கு அவ்விமான நிறுவனம், 800க்கும் மேற்பட்ட பெண் விமானிகளைக் கொண்டுள்ளது.

பொறியியல், விமானிகள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் அனைத்துப் பிரிவினர்க்கும் வாய்ப்பு வழங்க இண்டிகோ முயற்சி எடுத்து வருவதாக அக்குழுமத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுக்ஜித் எஸ் பஸ்ரிச்சா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பிரிவும் அனைவரையும் உள்ளடக்கி, பன்முகத்தன்மை கொண்டுள்ளதாக விளங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இப்போது எங்களது பொறியியல் துறையில் ஒட்டுமொத்தமாக பெண் பணியாளர்களின் விகிதம் 30 விழுக்காடாக உள்ளது என்று அவர் சொன்னார். அனைத்துலக அளவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை சராசரியாக 7 – 9 விழுக்காடாக இருக்கும் நிலையில், இண்டிகோ நிறுவனத்தில் அவ்விகிதம் 14 விழுக்காடாக உள்ளது.

2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் இண்டிகோ நிறுவனத்தில் பெண் விமானிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிடும்  என்றார் திரு சுக்ஜித். நாளொன்றுக்கு 2,000க்கும் அதிகமான விமானங்களை இயக்கிவரும் இண்டிகோ நிறுவனம், இப்போதைக்கு 5,000க்கும் மேற்பட்ட விமானிகளைக் கொண்டுள்ளது.

இவ்வாண்டு மார்ச் 31 நிலவரப்படி, இண்டிகோ நிறுவனம் 36,680 நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டிருந்தது. அவர்களில் 44 விழுக்காட்டினர் பெண்கள் என்று அதன் 2023-24 ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. எல்ஜிபிடிகியூ எனப்படும் பாலின ஈர்ப்பு விருப்புரிமையாளர்களுக்கும் இண்டிகோ தனது ஊழியரணியில் இடமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here