டாங்கர் லோரி மோதி சிவநேசன் மரணம்!

ஜோகூர்:

பழுதடைந்த காரை தள்ளிக்கொண்டு வந்த 48 வயது கே.சிவநேசன் மீது டேங்கர் லோரி மோதியதில் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள், கை – கால் முறிவு ஆகியவற்றால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவமானது ஜோகூர், வடக்கு-தெற்கு துரித நெடுஞ்சாலை 53.2 ஆவது கிலோ மீட்டரில் இன்று பின்னிரவு 1.10 மணியளவில் நிகழ்ந்தது என்று குளுவாங் ஓசிபிடி ஏசிபி பாஹ்ரின் முகமட் நோ கூறினார்.

சம்பவம் நிகழ்ந்த போது சிவநேசனும் டேங்கர் லோரி ஓட்டுனரும் ஒரே திசையில் ஜோகூரில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தனர் என்று பாஹ்ரின் குறிப்பிட்டார்.

ஹொன்டா HR – V வாகனத்தை சிவநேசன் ஓட்டி வந்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்தை வந்தடைந்த போது கார் பழுதடைந்தது.

அந்த நெடுஞ்சாலையின் இடது தடத்தில் கார் நின்றது. காரில் தனியாக வந்த சிவநேசன் காரில் இருந்து இறங்கி அவசர தடத்திற்கு தனியாக காரை தள்ளிக்கொண்டு வந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த டேங்கர் லோரி அவர் மீது மோதியது என்று பாஹ்ரின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

டேங்கர் ஓட்டுனர் 28 வயது முகமட் அஸஹார் முகமட் ஹலிம் தனக்கு முன்னால் இருந்த காரை தவிர்க்க தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்தது என்று முதல் கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது என்று பாஹ்ரின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here