கூலிம்:
கூலிமில் ஒரு தொழிற்சாலை கட்டுமான இடத்தில் பயன்படுத்தப்பட்ட ரப்பர் கையுறைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
இது குறித்து தம்முடைய அலுவலகம் நேற்று முன்தினம் மின்னஞ்சல் வழி புகார் பெற்றதாக கெடா மாநில சுற்றுசூழல் இலாகா இயக்குனர் ஷரிஃபா ஸாக்கியா சைட் சஹாப் Sharifah Zakia Syed Sahab கூறினார்.
அந்த இடத்தில் தொழில்நுட்ப ஆய்வுப் பணியை மேற்கொள்வதற்காக சென்ற ஆலோசகர் இந்த ரப்பர் கையுறை குவியலை பார்த்தார்.
அவர் தந்த புகாரின் அடிப்படையில் தம்முடைய இலாகா புலன்விசாரணையை தொடங்கி இருக்கிறது என்று ஷரிஃபா சொன்னார்.
இங்கு குவிக்கப்பட்டிருக்கும் பயன்படுத்தப்பட்ட ரப்பர் கையுறையின் எடை சுமார் ஒரு மெட்ரிக் டன் என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
இதன் மாதிரி பினாங்கில் உள்ள ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. முடிவு கிடைத்ததும் இந்த ரப்பர் உறைகளை சட்டத்திற்கு புறம்பாக இங்கு வீசியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.










