பெக்கான் சிம்பாங் கோலா அருகே கைவிடப்பட்ட கட்டடத்திற்குப் பின்னால் உள்ள வடிகால் ஒன்றில் நேற்று ஒரு பெண் மற்றும் அவரது மகள் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் குடும்ப வன்முறை காரணமாக இருக்கலாம் என கெடா துணை போலீஸ் தலைவர் அட்ஜிலி அபு ஷா தெரிவித்தார். நேற்று மாலை 5.04 மணியளவில் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் காணப்பட்டன. புலனாய்வுப் பிரிவினர் இரவு 9.20 மணியளவில் பாதிக்கப்பட்டவர்களின் கணவர் மற்றும் தந்தை 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர் கடந்த ஒரு வாரமாக கைவிடப்பட்ட கட்டிடத்தில் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நேற்று, போலீசார் அவரது மனைவி மற்றும் 10 வயது மகளின் சடலங்களை கண்டுபிடித்தனர். அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரது ஐந்து வயது மகன் சந்தேக நபருடன் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது என்றுஅவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதேவேளை, இன்று நண்பகல் கோல கெடாவின் பந்தாய் லெமன் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு வயது சிறுவனின் சடலம் சந்தேக நபரின் இளைய பிள்ளையின் சடலம் என போலீசார் நம்புவதாக அவர் கூறினார். குழந்தையின் உடலை முதற்கட்ட பரிசோதனையில் நேற்று கண்டெடுக்கப்பட்ட இரண்டு உடல்களிலும் இருந்ததைப் போன்ற வெட்டுக் காயங்கள் இருப்பது தெரியவந்தது. எனவே, குழந்தை சந்தேக நபரின் இளைய மகன் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடத்துவோம் என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைவிடப்பட்ட கட்டிடத்தில் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாகவும், இரண்டு உடல்கள் பின்னர் அருகிலுள்ள வாய்க்காலில் வீசப்பட்டதாகவும் அட்ஜிலி கூறினார். போதைப்பொருளுக்கு சாதகமாக சோதனை செய்த சந்தேக நபர் ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.









