30,000 பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் மிதந்த ஜாசின்; கரு மகா காளியம்மன் திருவிழா கோலாகலம்

(ரெ. மாலினி)

மலாக்கா:

ஜாசின் 16½ மைல், கம்போங் இந்தியாவில் அமைந்துள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ கரு மகா காளியம்மன் ஆலயத்தின் வருடாந்திர மகா திருவிழா, 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி பரவசமாகவும் ஆன்மிக எழுச்சியுடனும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவரும் காளி உபாசகருமான க. மகாலிங்கம் சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழா, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. மலாக்கா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அன்னையின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

பக்தர்களின் துயரங்களைத் துடைத்து, வாழ்க்கையில் நம்பிக்கையையும் நிம்மதியையும் அருளும் சக்தி வடிவாக விளங்கும் கரு மகா காளியம்மனை தரிசிப்பதற்காக சனிக்கிழமை இரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆலய வளாகம் முழுவதும் பக்தி முழக்கங்களும், அம்மன் திருநாமங்களும் ஒலித்து ஆன்மிகச் சூழலை உருவாக்கின.

அழகுற அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகள் பூட்டிய புனித இரதத்தில் தேவி ஸ்ரீ கரு மகா காளியம்மன் எழுந்தருளியபோது, மேளதாளம் மற்றும் உருமி இசையின் முழக்கம் விண்ணைப் பிளந்தது. வானில் வண்ணமயமான வாணவேடிக்கைகள் ஒளிர, பக்தர்கள் மலர் தூவி அன்னையை பக்திப் பரவசத்துடன் வரவேற்றனர்.

காளை மாடுகள் இழுத்துச் சென்ற அந்த புனித இரத ஊர்வலம், வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் மெய்சிலிர்ப்பையும் பக்தி உணர்வையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. “ஓம் சக்தி! பராசக்தி!” என்ற பக்தி முழக்கங்கள் விண்ணதிர முழங்க, ஜாசின் பகுதியே ஆன்மிக வெள்ளத்தில் திளைத்தது. அன்னையின் திருவுருவத்தை தரிசிக்க மக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டு நின்று அருளாசி பெற்றனர்.

ஆற்றங்கரையிலிருந்து தொடங்கிய நேர்த்திக்கடன் ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். மேலும் மயில் காவடி, இடும்பன் காவடி, கரும்பு காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை ஏந்திய பக்தர்கள் இரதத்தைத் தொடர்ந்து சென்று தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
திருவிழாவின் போது ஆலய வளாகம் முழுவதும் ஆன்மிக மணம் கமழ்ந்தது. வண்ண மின்விளக்குகள், மலர் அலங்காரங்கள் மற்றும் பக்தி இசைகளால் விழாக்கோலம் பூண்டிருந்த ஆலயம், பக்தர்களை வெகுவாக ஈர்த்தது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் அன்னையின் அருளைப் பெற குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக இவ்வாலயத்திற்கு வருகை தந்து வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தியதைக் காண முடிந்தது.

திருவிழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் கரகாட்டம், மயில் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உள்ளூர் கலைஞர்களின் திறமையான கலைப் படைப்புகள் திருவிழாவிற்கு வருகை தந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீச்சட்டி வைபவத்தில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்கான நன்றிக்கடனாகவும், நிறைவேற வேண்டிய பிரார்த்தனைகளுக்காகவும் தீச்சட்டி ஏந்திய பக்தர்கள், அம்மனை வணங்கி அருள் பெற்றனர். தீச்சட்டி வழிபாட்டின்போது நிலவிய பக்தி உணர்வு அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

சகல அலங்காரங்களுடனும் எழில் பொலிவுடன் அருள்காட்சி தந்த கரு மகா காளியம்மனை தரிசித்த பக்தர்கள், தங்களது குடும்ப நலன், தொழில் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் வாழ்வின் வளத்திற்காக சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் பாரம்பரிய முறையில் வாழை இலையில் அன்னதான உணவு வழங்கியது.

பல ஆண்டுகளாக இவ்வாலயத்தில் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த பாரம்பரியம், ஆலயத்தின் தனிச்சிறப்பாக விளங்குகிறது. தொண்டர்கள் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய காட்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

கடந்த 53 ஆண்டுகளாக கரு மகா காளியம்மனின் அருளால் இத்திருவிழா வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகை அன்னையின் மகிமைக்கு சான்றாக விளங்குவதாகவும் ஆலயத் தலைவர் மகாலிங்கம் சாஸ்திரிகள் தெரிவித்தார்.

“இன்னல்கள் நீங்கி இன்பம் பெருக, கரு மகா காளியம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்” என்ற பிரார்த்தனையுடன் பக்தர்கள் அன்னையின் திருவடியை வணங்கி மனநிறைவுடன் வீடு திரும்பினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here