புதுடெல்லி: இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் முன்னாள் நட்சத்திரம் அபினவ் பிந்த்ராவுக்கு ‘ஒலிம்பிக் ஆர்டர்’ விருது வழங்கி அனைத்துலக ஒலிம்பிக் குழு கௌரவித்துள்ளது. ஒலிம்பிக் இயக்கத்துக்குச் சிறந்த பங்களிப்பை நல்கியதற்காக, அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் 142வது அமர்வின்போது அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஆடவர் 10 மீட்டர் ‘ஏர் ரைஃபிள்’ துப்பாக்கிச்சுடும் பிரிவில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் போட்டியாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அவர் தற்போது அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் துணைத் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.