புதிய இடத்திற்கு மாறிய ஹோலிரூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி

ஒன்றாம் ஆண்டில் 15 மாணவர்கள்
மொத்த மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

தைப்பிங், 

பதினோரு ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 34 மாணவர்களுடன் செயல்படத் தொடங்கிய ஹோலிரூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு ஒன்றாம் ஆண்டிற்கு மொத்தம் 15 மாணவர்கள் பதிந்துள்ளனர். மற்ற வகுப்புகளுக்கு மாறி வந்துள்ள மாணவர்களையும் சேர்த்து இப்பள்ளியின் தற்போதைய மொத்த மாணவர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாக பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் கோ.சண்முகவேலு தெரிவித்தார்.

முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியை திருமதி ஜோசப்பின் இராயப்பன் தலைமையில் ஆசிரியர்கள் ஊக்கத்துடன் மாணவர்களை வரவேற்க மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த காட்சி பெற்றோரை மகிழ்வித்தது.

கடந்த 2009ஆம் ஆண்டு இங்கு புக்கிட் கந்தாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தல் காலத்தில் 3500 இந்திய வாக்காளர்களைக் கொண்ட சங்காட் ஜெரிங் சட்டமன்றத் தொகுதியிலும் பத்து புதிய குடியிருப்புகளையும் ஏறத்தாழ ஆயிரம் இந்தியர்களையும் கொண்ட தாமான் காயா வட்டாரத்தலும் ஒரு தமிழ்ப்பள்ளி இல்லாத குறையைக் களைய இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி வேண்டும் என்று மஇகா புக்கிட் கந்தாங் தொகுதி முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அப்போதைய கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் ஓன் இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி அமைப்பதற்கான அனுமதியை வழங்கினார்.

அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு 2013ஆம் ஆண்டுவாக்கில் இன்றைய பிரதமரும் அன்றைய கல்வி அமைச்சருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் 25 லட்சம் வெள்ளி மானியத்தையும் பேராக் மாநிலத்தின் அன்றைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதிர் 3.4 ஏக்கர் நிலத்தைம் வழங்கிய பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

என்றாலும் வேறு பல காரணங்களால் அப்பணிகளில் சற்று சுணக்கம் கண்டன. 2017ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வருகை மேற்கொண்டதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் துரிதமடைந்தன.
அப்போதைய கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் இதற்கான மானியத்தை 67 லட்சமாக அறிவித்தார். இத்தகைய சூழ்நிலையில் பல்வேறு இடர்ப்பாடுகளைக் கடந்து இப்பள்ளி தற்போது அனைத்து வசதிகளுடன் மூன்று மாடி கட்டடமாக கட்டி முடிக்கப்பட்டு கடந்தாண்டு முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது இப்பள்ளிக்கு அரசாங்கப் பாலர்பள்ளி கேட்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக சண்முகவேலு சொன்னார்.
தற்போது மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதுடன் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் சிறப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக மார்ச் 1ஆம் தேதி தோடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2022 -2023 கல்வி ஆண்டிற்கான மாணவர் பதிவு காலகட்டத்தில் சுற்றுவட்டாரங்களிலுள்ள பெற்றோர் தங்களின் பிள்ளைகளை இப்பள்ளியில் பதிய விரைந்து முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு தமிழ்ப்பள்ளிகளை இடம் மாற்றவதாலோ, புதிய தமிழ்ப்பள்ளிகளைக் கட்டுவதாலோ மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை நமது பெற்றோர் இதன் வழி மெய்ப்பிக்க வேண்டும் என்று மஇகா பேராக் மாநில தொடர்புக்குழு செயலாளருமான அவர் பள்ளியின் அனைத்துத் தரப்பினரின் சார்பாக கேட்டுக்கொண்டார்.

கவின்மலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here