கோலாலம்பூர்:
பந்தாய் டாலாமில் உள்ள இண்டா வாட்டர் கொன்சொர்ட்டியத்தின் கழிவு நீர்த் தரமேற்றல் உலையில் விஷ வாயு, தீப்பற்றி எரியும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதால் தேடல், மீட்பு குழுவினருக்கு மிகப்பெரிய சவாலாகவும் இடையூறாகவும் இருக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 15 மீட்டர் உயரமுள்ள கழிவு நீர் டாங்கியில் விஷ வாயு நிறைந்திருக்கிறது. பட்டென தீப்பற்றி எரியும் அபாயமும் உள்ளது.
அந்த டாங்கியை சோதனை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை இரண்டு அதிகாரிகளும் திங்கட்கிழமை நான்கு அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டதன் வழி இந்த உண்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.20 மணியளவில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, மலேயன் மென்சன் முன் உள்ள நடைபாதையில் நடந்து சென்ற போது திடீரென மண் உள்வாங்கியதில் ஏற்பட்ட 8 மீட்டர் ஆழமுள்ள பாதாளக் குழியில் விழுந்து காணாமல் போன ஆந்திரா, குப்பம் பகுதியை சேர்ந்த 48 வயது விஜயலெட்சுமியை தேடி மீட்கும் பணியில் தீயணைப்பு – மீட்பு இலாகா, போலீஸ், கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஆகிய தரப்புக்களுடன் கரம் சேர்ந்து இண்டா வாட்டர் கொன்சோர்ட்டியமும் களமிறங்கியிருக்கிறது.
இதனிடையே தேடல், மீட்பு பணிகள் குறித்து லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸிலுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.